ஒருநாளைக்கு நூறு எஸ்.எம்.எஸ்.க்குமேல் அனுப்ப முடியாது என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அறிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடு சென்ற வருடம் செப்டம்பர் மாதத்திலிருந்தே தனிநபர்களுக்கு மட்டும் நடைமுறையில் இருந்து வருகிறது.
இதில் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மாதத்திற்கு 3000 எஸ்.எம்.எஸ் வரை அனுப்ப அனுமதிக்கப்பட்டது. அதேபோல ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கும் ஒரு நாளைக்கு 100 குறுஞ்செய்திகளுக்குமேல் அனுப்ப முடியாத கட்டுப்பாடும் இருந்து வந்தது. இது WAY TO SMS DOT COMˆ– போன்ற இணையதளம் வழியாக அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கும் பொருந்தும்.
இதுதவிர முக்கிய நிகழ்வுகளின்போதும் சமீபத்தில் வடகிழக்கிந்தியர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரவி, பதற்றமேற்பட்ட போதும் ஒருநாளைக்கு ஒரு சிம்கார்டிலிருந்து ஐந்து குறுஞ்செய்திகளுக்கு மேல் அனுப்ப முடியாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.
சுமார் ஆறு நாட்கள் விதிக்கப்பட்ட இந்தக் கட்டுப்பாட்டின்போது தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட 300 கோடிகளுக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இப்போது விதிக்கப்பட்டிருக்கும் புதிய கட்டுப்பாடுகளால் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருமானம் 7 முதல் 8 சதவிகிதம்வரை குறைய வாய்ப்புள்ளது.
ஏன் கட்டுப்பாடு?
வடகிழக்கு மாநிலத்தவர்கள் தாக்கப்பட்டனர் என்ற வதந்தி பல்க் எஸ்.எம்.எஸ்.கள் மூலம் காட்டுத் தீயாய்ப் பரவியதை மத்திய, மாநில அரசுகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதனால் மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் தடைவிதித்தது.
பல்க் எஸ்.எம்.எஸ். மூலம் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் செவித்திறன் அற்றோர், தகவல்களை தெரிவிக்கும் நிறுவனங்கள், ரயில்வே, விமான விசாரணைத் தகவல்கள் போன்றவை பாதிக்கப்பட்டன. இதனால் யார், யாருக்கு இதில் விலக்கு அளிக்கப்படவேண்டும் என்பதை முடிவு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் இதுகுறித்து ஆராய குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு, பட்டியல் ஒன்றைத் தயாரித்து பல்க் எஸ்.எம்.எஸ். விதிவிலக்குகள் குறித்துப் பரிந்துரைத்தது.
யார் யாருக்கு விதிவிலக்கு?
அதன்படி விளம்பர நிறுவனங்களிலிருந்து விளம்பரங்களை சுமந்துவரும் குறுஞ்செய்திகளுக்கு ஒரு சிம்மிலிருந்து ஒருநாளைக்கு 100 எஸ்.எம்.எஸ். தான் அனுப்ப முடியும், அதற்குமேல் அனுப்பினால் ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் 50 பைசா கட்டணம் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் வாடிக்கையாளர்களுக்கான சேவையை வழங்குகிற வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ரயில்வே, விமான அல்லது தொலைத் தொடர்புத்துறை ஆகிய நிறுவனங்களுக்கு இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தை முறையாகப் பதிவுசெய்து வர்த்தகத்தில் ஈடுபடுபட்டு வரும் நிறுவனங்களுக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
இது மட்டும்தானா?
இந்த உத்தரவு இன்னும் சில நாட்களில் நடைமுறைக்கு வரும். இன்னும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் பின்னர் விதிக்கப்படும். வர்த்தகரீதியில் ஒரே மாதிரியான எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பப்படுவதைத் தடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று ட்ராயின் முதன்மை ஆலோசகர் பரமேஸ்வரன் கூறியிருக்கிறார்.
வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
மொபைல் போன் வாடிக்கையாளர்கள் UCC என டைப் செய்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தொடர்பு எண் மற்றும் தேதி போன்ற விவரங்களை டைப் செய்து 1909 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் மூலம் புகார் அளித்தால் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நன்றி : புதிய தலைமுறை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக