ஞாயிறு, 4 நவம்பர், 2012

Diwali/Deepavali Sweets : தீபாவளி பட்சணம் செய்ய ஆரம்பித்து விட்டீர்களா?


      தீபாவளி பட்சணம் செய்ய ஆரம்பித்து விட்டீர்களா? கீழ்கண்ட டிப்ஸ்களையும் படித்து, நினைவில் வைத்தால், சூப்பர் சமையல் ராணிகள் நீங்கள்தான். தீபாவளியை அசத்துங்கள் தோழியரே.

* தேன் குழல் செய்ய, மாவு அரைக்கும் போது, உருளைக்கிழங்கை வேக வைத்து, அதனுடன் சேர்த்து அரைத்தால், தேன் குழல் மிக மிக சுவையாக இருக்கும்.

* அதிரசம் செய்யும் போது, சிறிது பேரீச்சம்பழமும் கலந்து மாவை பிசையுங்கள். சுவை ஜோராக இருக்கும்.



* மைசூர்பாக் செய்யும் போது, ஒரு பங்கு கடலை மாவுடன், இரண்டு பங்கு பயத்த மாவு என்ற அளவில் கலந்து செய்தால், வாயில் போட்ட உடனே மைசூர்பாக் கரைந்து விடும்.

* ரவா லட்டு செய்யப் போகிறீர்களா? கையில் நெய்யை தடவிக் கொண்டு உருண்டை பிடியுங்கள். உருண்டையும் செம ஈசியாக வரும். வாசனையாகவும் இருக்கும்.


* அல்வா தயாரிக்கும் போது, கடைசியில் சிறிது மில்க்மெய்ட் சேர்த்து கிளறினால், அல்வா சூப்பர் அல்வா ஆகிவிடும்.

* சோமாஸ் செய்யும் போது, பொட்டு கடலையுடன் வறுத்து பொடித்த கசகசா மற்றும் எள் போட்டுக் கொண்டால், நல்ல மணமாக இருக்கும்.

* குலோப் ஜாமுனுக்கு உருண்டைகளை உருட்டும் போது, கையில் நெய் தடவிக் கொண்டு உருட்டினால் ஒட்டாது, ஜாமுனும் மணக்கும்.


* இனிப்புகள் தயாரிக்கும்போது, சர்க்கரைக்கு பதில், வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றை பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

* குலோப் ஜாமுன் செய்யும் போதெல்லாம் சர்க்கரைப் பாகும், அதில் கரைந்து கிடைக்கும் ஜாமுன் உதிரியும் வீணாவது சகஜம். அந்த ஜாமுன் பாகில், சிறிது சிறிதாக மைதாவைச் சேர்த்துப் பிசையுங்கள். சில நிமிடங்களில், சப்பாத்தி மாவு போல திரண்டு வரும். பிறகு, மாவு சேர்ப்பதை நிறுத்திவிட்டு, பிசைந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, சதுர துண்டுகளாக்கி, எண்ணெயில் பொரித்தெடுங்கள். அருமையான மைதா பிஸ்கட்டுகள் ரெடி!

* ரவா உருண்டை, பயத்தம் மாவு உருண்டை பண்ணும்போது, கொஞ்சம் மில்க் பவுடரை சேர்த்து, நெய்யை உருக்கிவிட்டுப் பிடித்தால், சுவை அதிகமாக இருக்கும்.


* பர்பி, மைசூர்பாகு போன்ற ஸ்வீட்ஸ் செய்யும் போது, கடாயின் அடியில் ஒட்டிக்கொண்டு எடுக்கவே வராது. அதை கரண்டியால் சுரண்டாமல், கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து, மிதமாக சூடு பண்ணி, லேசாகத் தேய்த்தால், ஒட்டிக் கொண்டிருப்பது சுலபமாகப் பெயர்ந்து விடும்.

* தேய்காய் பர்பி செய்யும்போது, முதலிலேயே சர்க்கரை, தேங்காய் துருவல் இரண்டையும் சேர்த்து அடுப்பில் வைக்காதீர்கள். சர்க்கரையைக் கம்பி பாகு பதம் வரும்வரை காய்ச்சிய பின், தேங்காய் துருவலைச் சேர்த்தால், அதிகம் கிளற வேண்டிய அவசியமிருக்காது. பர்பியும் சீக்கிரத்தில் கெட்டி யாகிவிடும்.

* தேன்குழல், ரிப்பன் பக்கோடா, தட்டை போன்றவை நமுத்துப் போகாமல், மொறுமொறுவென்று இருக்க, மாவை பிசையும் போது வெந்நீர் ஊற்றிப் பிசைய வேண்டும்.


* தீபாவளி ஸ்நானத்துக்கு  நல்லெண்ணெய் காய்ச்சும்போது வெற்றிலையைப் பிய்த்துப்போட்டு, ஒரு தேக்கரண்டி ஓமத்தையும் போட்டுக் காய்ச்சினால், எண்ணெய் பச்சையாக இருக்கும். அதை தேய்த்து குளித்தால் சளி பிடிக்காது. உடம்பு உஷ்ணத்தைத் தணிக்கும்.



நன்றி : தினமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக