செவ்வாய், 13 நவம்பர், 2012

Banks are Honest? : பொதுத்துறை வங்கிகளில் அரசியலா?


ரூ. 1,23,462,00,00,000

     இந்தியப் பொதுத்துறை வங்கிகள் கொடுத்துத் திரும்ப வராத கடன்களின் மொத்த மதிப்புதான் இது. உண்மையான அதிர்ச்சி இந்தத் தொகையல்ல. இந்தியாவில் இன்றைக்கு யாருடைய கவனத்தையும் இந்தத் தொகை ஈர்க்கவில்லை என்பதுதான்.

     வங்கித் தொழிலில் கரை கண்டவர்கள் ‘வராக் கடன் கணக்கு இல்லாமல் வங்கித் தொழில் செய்ய முடியாது’ என்று சொல்வார்கள். அதுவும் இந்திய வங்கிகள் இப்போது சம்பாதிக்கும் லாபத்துக்கு முன் இந்த வராக் கடன் கணக்கு எல்லாம் ஒரு பொருட்டாகவே இல்லாமல் இருக்கலாம். 

     ஆனால் கடன் சுமை காரணமாக அரை மணிநேரத்துக்கு ஒரு விவசாயியின் உயிர் போகும் ஒரு நாட்டில், இந்த 1.23 லட்சம் கோடி ரூபாய் எப்படி உருவாகிறது என்பதும் இந்த வராக் கடன்களை அனுபவிப்பவர்கள் எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்பதும் இங்கே முக்கியம்.


     ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்ய ஒரு விவசாயிக்கு 20 ஆயிரம் ரூபாய் வரையிலும் செலவு ஆகிறது. இந்தத் தொகையில் 60 சதவீதம் கூலிச் செலவுதான். நாட்டுக்கு உணவு கிடைப்பதோடு 60 விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். ஆனால் நம் விவசாயிகளுக்கு கடன் கிடைப்பது இல்லை. 

     அப்படியே நிலத்தையோ, நகைகளையோ அடமானம் வைத்து, வங்கி வாசலில் ‘நாணயம் தவறியவர்கள்’ பட்டியலில் வீட்டு முகவரியோடு தொங்குகிறது விவசாயியின் முகம். நல்லதுதான். நாணயம் தவறியவர்களுக்கு இந்தத் தண்டனை தேவைதான். 

     பெரும்பாலும் ஆயிரங்களிலும், அபூர்வமாக லட்சங்களிலும் கடன் வாங்கி நாணயம் தவறியவர்களுக்கே இந்த தண்டணை என்றால் கோடிக்கணக்கில் கடன் வாங்கி, திட்டமிட்டு ஏமாற்றியவர்களுக்கு எப்படிப்பட்ட தண்டனை கொடுக்க வேண்டும்?


     ‘கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம்’ தொடங்கிய நாளில் இருந்தே நஷ்டக் கணக்கு காட்டியது. கடந்த நவம்பரில் மூன்று மாத நஷ்டம் 469 கோடி என்றது அந்நிறுவனம். நிச்சயம் ஒருநாள் மூழ்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது அப்போது. ஆனால் அதற்குப்பின்னர்தான் 400 கோடி கடன் வாங்கியது. இப்போது வங்கிகளுக்கு கிங் ஃபிஷர் 7524 கோடியைக் கடன் பாக்கியாக வைத்திருக்கிறது.


     தங்கள் பணத்தை மீட்கும் வழி தேடிக் கூட்டங்களை வங்கிகள் நடத்தின. அதற்கு தங்களின் நிறுவனங்களைச் சேர்ந்த சாதாரண அதிகாரிகளை அனுப்பினர்.


     சரி! இப்போது கிங் ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளர் எங்கே? ஊர் ஊராக கார் பந்தயம் பார்க்கச் சுற்றிக் கொண்டிருக்கிறார். அவரது மகன் மதுபான நிறுவனத்தின் காலண்டருக்கு லண்டனில் அழகிகளைத் தேடிக் கொண்டு இருக்கிறார்.

     இவர்களின் படத்தை வங்கி வாசலில் சுவரொட்டியாக ஒட்டும் துப்பு இந்திய வங்கிகளுக்கு உண்டா?


Courtesy : Swaminathan Manickam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக