செவ்வாய், 3 ஜூலை, 2012

தன் மரணத்தை கூறிய மகான்


     
     ஒருநாள் ராகவேந்திரர், மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருதார். அவர் திடீரென்று எழுந்து, ஆகாயத்தை பார்த்து வணங்கி விட்டு, எதையோ கேட்டார். மறுபடியும் வணங்கிவிட்டு அமர்ந்தார். சீடர்களுக்கு வியப்பு, சுவாமிகள் ஏன் வானத்தை நோக்கி வணங்கினார்ப யாரிடம் என்ன கேட்டார்? அவர்கள் விபரம் கேட்டார்கள்.
     அதற்கு ராகவேந்திரர் கூறினார், "ஸ்ரீகிருஷ்ணத்வைபாயனர் என்ற தவசீலர், மேலே வைகுந்தம் சென்று கொண்டே, எனக்கு தரிசனம் தந்தார். நான் அவரை வணங்கி, இன்னும் எவ்வளவு காலம் நான் பூத உடலுடன் வாழ வேண்டும் என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், இரண்டு விரல்களை காண்பித்து, மூன்று முறை அசைத்துக் காண்பித்தார்.
     நான் அதை புரிந்து கொண்டு அவருக்கு நன்றி சொல்லி வணங்கினேன். அவர் சைகை காட்டியதன் பொருள், நான் இன்னும் இரண்டு வருடம், இரண்டு மாதம், இரண்டு நாள்தான் பூத உடலுடன் இருக்க முடியும். அதன்பிறகு பிருந்தாவனம் சென்று விடுவேன்'' என்றார். சீடர்களுக்கு ராகவேந்திரரின் வார்த்தை, வருத்தத்தை கொடுத்தது.
     குரு, தங்களை விட்டு பிரியும் நாள், விரைவில் வருகிறதே என்று கவலைப்பட்டனர். ஸ்ரீராகவேந்திரர், உடனேயே தன்னுடைய பிருந்தாவனத்திற்காக, ஓர் இடத்தை தேடி, யாத்திரை செல்லத் தேவையான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார்.
     கும்பகோணம் மடத்தில் தன்னுடைய குருவுக்கு குருவான ஸ்ரீவிஜயீந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்தில் முறையோடு, எவ்வித குறையும் இல்லாமல், பூஜை செய்ய தகுந்த ஒருவரை நியமித்தார் அப்போது, ஸ்ரீசக்ரபாணி ஆலயம், ஸ்ரீசாரங்கபாணி ஆலயம் மற்றும் ஸ்ரீகும்பேஸ்வரர் ஆலயம் ஆகியவை மடத்தின் கண்காணிப்பில் இருந்தன.
     ஸ்ரீசக்ரபாணி ஆலயம் மற்றும் ஸ்ரீசாரங்கபாணி ஆலயம் ஆகிய இரண்டு ஆலயங்களையும், ஸ்ரீஅகோபில மடத்தின் மேற்பார்வைக்கு விட்டார். ஸ்ரீகும்பேஸ்வரர் ஆலயத்தை, ஸ்ரீகாமகோடி மடத்தின் மேற்பார்வையில் விட்டார்.
     இவ்வாறு, தன்னுடைய பொறுப்புகள் அனைத்தையும், சரியானவர்களிடம் ஒப்படைத்த திருப்தியுடன், சீடர்களுக்கு ஆசியும், அறிவுரைகளும் கூறிவிட்டு, கும்பகோணத்தை விட்டு யாத்திரை கிளம்பினார்.

1 கருத்து: