ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகள் குழுவை சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்க மறுத்தால், ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை அடுத்த கட்டமாக கடும் நடவடிக்கைகளில் இறங்கக் கூடும் என்று ஜெனிவா தகவல்கள தெரிவிக்கின்றன.
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளத் தயாராகி வருவதாக ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை ஏற்கனவே சிறிலங்கா அரசுக்குத் தகவல் அனுப்பியிருந்தார். அத்துடன் சிறப்புக் குழுவொன்றையும் அனுப்பப் போவதாகவும் அவர் சிறிலங்கா அரசுக்கு அறிவித்திருந்தார்.
ஆனால் நவி பிள்ளையின் கடிதத்துக்குப் பதில் அனுப்புவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், இந்த விவகாரம் குறித்து மௌனத்தை கடைப்பிடிக்கவும் முடிவு செய்துள்ளது. இருந்தாலும் ஐ. நா மனித உரிமைகள் பேரவைக்கு சிறிலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமற்ற பதில் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் நவி பிள்ளையின் பயணத்தை தாம் எதிர்க்கவில்லை என்றும், ஆனால் சிறப்புக் குழுவை அனுமதிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் நவி பிள்ளை சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த அதிகாரபூர்வ கடிதத்துக்கு பதில் அனுப்பவில்லை என்று ஜெனிவா வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நவி பிள்ளையுடன் சிறப்புக்குழுவை சிறிலங்கா அனுமதிக்க மறுத்தால், அவர் அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுப்பதற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த சிறிலங்கா அரசாங்கம் தவறி விட்டதால், ஹேக்கில் உள்ள அனைத்துலக போர்க்குற்ற தீர்ப்பாயத்தின் முன்பாக இந்த விவகாரத்தைக் கொண்டு செல்லும்படி அடுத்த ஐ. நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் அவர் முன்மொழியக் கூடும்.
அல்லது ஐ. நா மனித உரிமைகள் பேரவையில், எதிர்காலத்தில் சிறிலங்கா அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான சிறப்பு அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதுடன் சிறிலங்காவுக்கு எதிரான புதியதொரு தீர்மானத்தை அவர் முன்மொழியலாம்.
நவி பிள்ளையுடன் அவரது குழுவினரின் பயணத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுமேயானால், இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை அவர் தெரிவு செய்யக்கூடும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக