பெற்றோரை புறக்கணிப்பதால், அவர்கள் வாழ்க்கை நடத்த வழியின்றி, கோர்ட்டுகளை நாடும் அவலம் உள்ளது. அவர்களை கண்களின் இமைகள் போல் பாதுகாக்க வேண்டும்,'' என, சென்னை ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா பேசினார்.
மதுரை அருகே காரியாபட்டி புல்லூர் சேது பொறியியல் கல்லூரியில், 13 வது பட்டமளிப்பு விழா நடந்தது. நிறுவனர் முகம்மது ஜலீல் வரவேற்றார். முதல்வர் செந்தில்குமார் அறிக்கை வாசித்தார்.
ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா பட்டங்களை வழங்கி பேசியதாவது : மத நல்லிணக்கம் நிலவுவது பள்ளி, கல்லூரிகளில்தான். கல்விதான் அனைத்திற்கும் அடித்தளம். மாணவர்களை பட்டதாரிகளாக பார்த்து, பெற்றோர் ஆனந்த கண்ணீர் விடுகின்றனர்.
நீங்கள் வேலை தேடி வெளிநாடுகள் சென்றபின், பெற்றோரை மறந்துவிடுவது நல்லதல்ல. பெற்றோரை புறக்கணிப்பதால், அவர்கள் வாழ்க்கை நடத்த வழியின்றி, கோர்ட்டுகளை நாடும் அவலம் உள்ளது. பெற்றோர் உங்களிடம் பணத்தை எதிர்பார்ப்பதில்லை. அன்புக்காக ஏங்குகின்றனர். கண்களின் இமைகள் போல், பெற்றோரை பாதுகாக்க வேண்டும். இன்று மாணவர்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் முன்மாதிரியாக உருவாகுங்கள். ஊழலை எதிர்த்து போராடுங்கள் என்றார்.
நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் பேசியதாவது : தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள இக்கல்லூரியால், மாணவர்கள் பயனடைகின்றனர். பட்டமளிப்பு விழா என்பது விதைத்ததை அறுவடை செய்யும் நாள். மாணவர்கள் எதிர்காலத்தில் பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. உங்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.
நேற்று முடியாதது, இன்று முடியும் என நிரூபிக்கப்படுகிறது. அப்துல்கலாம் கூறியதுபோல் நீங்கள் கனவு காணவேண்டும். தொலைநோக்கு சிந்தனை பெற வேண்டும். தகவல் தொழில்நுட்ப புரட்சியால், ஏழை மாணவர்கள் கூட வெளிநாடுகளில் வேலை செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒழுக்கம், கடின முயற்சி, நேர்மறை எண்ணங்கள் இருந்தால் சாதிக்க முடியும். வாழ்வின் இறுதி வரை கற்றுக்கொண்டு இருக்க வேண்டும் என்றார்.
இந்திய ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் அபுபக்கர், கல்லூரி இணை முதன்மைச் செயலாளர் சீனி முகமது அலியார் மரைக்காயர், துணை முதல்வர் சிவகுமார் பங்கேற்றனர்.
நன்றி : தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக