இளம்பெண் ஒருத்திக்கு மற்றவர்களைக் குறித்து குறை கூறிப்பேசுவதில் அலாதி ஆனந்தம். இப்படியே பேசிப்பேசி அநேக நல்லவர்களின் மீதான அபிப்ராயத்தைக் கெடுத்துவிட்டாள். ஒருநாள் அவள் தன் செயல்களை எண்ணிப்பார்த்தாள். தான் செய்த செயல் எவ்வளவு மோசமானது என்பதை நினைத்து வெட்கப்பட்டாள். வருத்தத்துடன் பாதிரியாரிடம் தனது செயலை பாவ அறிக்கையாகக் கொடுத்தாள்.
""ஐயா! நான் அநேகரைப் புண் படுத்தியிருக்கிறேன். அவர்களைக் குறித்துப் பேசியதை நான் எப்படி திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்?'' என்று கேட்டாள். பாதிரியார் அவளிடம், ""நீ போய் ஒரு பை நிறைய கோழி இறக்கைகளைச் சேகரித்து, உன் வீட்டில் இருந்து இந்த ஆலயம் வரை உள்ள வழியில் சிதற விட்டுக்கொண்டே வா,'' என்றார்.
அவளும் அப்படியே செய்தபடி ஆலயம் வந்து சேர்ந்தாள். பாதிரியார் சொன்னது போலவே செய்ததைச் சொன்னாள். "சரி! நீ இப்போது உன் வீட்டுக்குத் திரும்பு. செல்லும் வழியில், நீ சிந்திய இறக்கைகளைப் பொறுக்கி பையில் வைத்துக்கொள். அந்தப் பையை இங்கு கொண்டு வா,'' என்றார்.
அவள் அங்கிருந்து கிளம்பினாள். சாலையில் அவள் சிந்திய இறக்கை எதையும் காணவில்லை. அவை அநேகமாக காற்றில் எங்கோ அடித்துச் செல்லப்பட்டு விட்டது. "ஒன்றைக் கூட என்னால் சேகரிக்க முடியவில்லை,'' என்று வருத்தத்துடன் பாதிரியாரிடம் சொன்னாள். பாதிரியார் அவளிடம், "உன் வார்த்தைகளும் அப்படித்தான். வார்த்தைகள் சிந்திவிட்டால் அவற்றைப் பொறுக்கவே முடியாது''.
அதனால், இனிமேலாவது பிறரைப் பற்றி யோசித்துப் பேசு என்றார். "வீணான வார்த்தைளுக்கு கணக்கொப்புவிக்க வேண்டும்,'' (மத்.12:26) என்கிறது பைபிள். ஆம்! நமது தேவையற்ற பேச்சு பற்றி ஆண்டவரின் சன்னிதானத்தில் விசாரணை வரும். அப்போது, அதற்கெல்லாம் நாம் விளக்கமளிக்க வேண்டி வரும். கவனம்.
நன்றி : தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக