ராவணன், திவாகரன் மீதான வழக்குகள் என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, முதலமைச்சர் கொடநாட்டில் இத்தனை நாட்கள் தங்கவும், அவரைப் பார்ப்பதற்காக அதிகாரிகளும், அமைச்சர்களும் யாத்திரை செய்ய ஆகின்ற செலவெல்லாம் மக்கள் தரும் வரிப் பணம் தானே? என்றும் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இன்றைய அதிமுக ஆட்சியில் இன்று (11ம் தேதி) ஒரு நாளில் மட்டும் என்னென்ன நடைபெற்றதாக இன்று ஏடுகளில் வந்துள்ள செய்திகளை மட்டும் தொகுத்துக் காட்டுகிறேன். ஆட்சி நடைபெறுகிறதா இல்லையா என்று அது காட்டும்.
சென்னை சைதாப்பேட்டையில் லஞ்சம் வாங்கியதை புகைப்படம் எடுத்தது தொடர்பாக 2 தலைமைக் காவலர்கள், சங்கர்,ஷாஜகான் சாலையில் கட்டிப் புரண்டு சண்டை போட்டிருக்கிறார்கள்.
சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் க.ரமேஷ் என்ற 45 வயதான தொழிலதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த அருள் என்ற ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை.
கோவை அவிநாசி சாலையில் குடிபோதையில் பெண்ணிடம் தகராறு செய்திருக்கிறார் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் கருப்பையா.
ஆளுங்கட்சியான அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர் வி. பி. கலைராஜன் வீடு தாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி மாற்றியிருக்கிறார். பணியிடம் ஒதுக்காத காரணத்தால் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். பவானிசாகர் அணை நீர்மட்டம் கவலைக்கிடம் கேள்விக்குறியாகும் விவசாயம்.
நாமக்கல் அரசு மருத்துவமனையிலிருந்து பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. கம்பம் அருகே அங்கன்வாடி மையத்தில் 4 வயது குழந்தை ரோஷிணிக்கு சூடு வைத்திருக்கிறார்கள். மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பள்ளி மாணவி பூமாரி தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்.
விருதுநகர், திருச்சுழி அருகே 2 பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் 3 அரசு பேருந்துகள் உட்பட 5 பேருந்துகள் நாசமடைந்துள்ளன. தமிழகம் முழுவதும் 11 மேம்பாலப் பணிகள் நிறைவடையாமல் உள்ளன அந்தரத்தில் விடப்பட்ட நெடுஞ்சாலைத் துறைப் பணிகள்.
6 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலி, பதவியைப் பிடிக்க பலரும் கோட்டைக்கு படையெடுப்பு. நெல்லுக்குத் தட்டுப்பாடு உயர்கிறது அரிசி விலை ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம். மத்திய நிதியைப் பயன்படுத்தாத தமிழக அரசு ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் ஜெய்ராம் கடிதம்.
சில்மிஷ ஆசிரியர் மீது நடவடிக்கை இல்லை. முதல்வர் உத்தரவை செயல்படுத்தாமல் கல்வித் துறை அலட்சியம். இன்று காலையில் ஏடுகளில் வந்துள்ள செய்திகளைத்தான் இங்கே எடுத்து எழுதியிருக்கிறேன். இவற்றைப் பற்றியெல்லாம் கவனிக்க முதலமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ தலைநகரிலே இருக்கிறார்களா?.
ஆனால் அன்றாடம் முதலமைச்சர் பெயரால் ஒரு அறிவிப்பு மட்டும், துப்புரவுப் பணியாளர் நியமனம், வருவாய்க் கிராமங்கள் உயர்வு, கவுரவ விரிவுரையாளர் நியமனம் என்று மட்டும் கொடநாட்டிலே இருந்தவாறே பேக்ஸ் மூலமாகவே வந்து கொண்டிருக்கின்றன.
முதலமைச்சர் நினைத்தால் சசிகலா மீதும், அவருடைய கணவர் மீதும், அவர்களுக்கு வேண்டிய ராவணன், திவாகரன் போன்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பார். அடுக்கடுக்கான வழக்குகளைப் பதிவு செய்வார். தற்போது அந்த வழக்கிலே குற்றம் சாட்டப்பட்ட ராவணனை கோடநாட்டிற்கே அழைத்துப் பேசுகிறார் என்பது உண்மையென்றால் இவைகள் எல்லாம் யாரை ஏமாற்றுகின்ற செயல்கள்? அவர்கள் மீதெல்லாம் போடப்பட்ட வழக்குகள் என்னவாயிற்று?
நடராஜன் மீது புகார் என்றார்கள். பிறகு கொடுக்கப்பட்ட புகார்கள் திரும்பப் பெறப்பட்டன என்கிறார்கள். அப்படியென்றால் பொய்ப் புகார் கொடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை? அந்தப் புகார் பொய்யானதா, மெய்யானதா என்று காவல் துறை முறையாக முதல் நிலை விசாரணை நடத்தாதது ஏன்?
அதிமுக தேர்தல் அறிக்கையையே அவர் தான் தயாரித்துக் கொடுத்தேன் என்றார். முதலமைச்சருக்கு பேசவே தெரியாது, நான்தான் எழுதிக் கொடுத்தேன் என்றார். அவைகள் எல்லாம் உண்மைகளா? இந்த அரசு அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் இருப்பதிலிருந்து, அவர் சொன்னதெல்லாம் உண்மை என்றுதானே மக்கள் நம்புவார்கள்.
முதலமைச்சர் கொடநாட்டில் இத்தனை நாட்கள் தங்கவும், அவரைப் பார்ப்பதற்காக அதிகாரிகளும், அமைச்சர்களும் யாத்திரை செய்ய ஆகின்ற செலவெல்லாம் மக்கள் தரும் வரிப்பணம் தானே?” என்று கூறியுள்ளார்.
நன்றி : ஜூனியர் விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக