சிவகங்கை மாவட்ட புதுவாழ்வுத் திட்டத்தின் மூலம் ஊராட்சிகளுக்கு கிராம வறுமை ஒழிப்பு சங்க துவக்க நிதி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ராஜாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜாராமன் பேசியதாவது :-
சிவகங்கை மாவட்டத்தில் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் 32 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு கிராமத்திலும் வறுமையிலும் வறுமையில் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் பொருளாதார முன்னேற்றம் பெறச் செய்வதே இதன் நோக்கமாகும்.
இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட பெண்கள் குழு தொழில் அமைப்பதற்கு தேவையான பயிற்சிகளை முழுமையாக பெற்றுக் கொள்ளவேண்டும். தற்பொழுது வேளாண்மைத் துறையின் மூலம் அதி நவீன தொழில் நுட்பகருவிகள் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் களை எடுக்கும் எந்திரம், நாற்று நடும் எந்திரம், கடலை உடைக்கும் எந்திரங்கள் போன்றவைகளை இயக்குவதற்கான பயிற்சி பெற்று பெண்கள் குழு வங்கிகள் மூலம் எந்திரங்களை பெற்று பயன் பெறலாம்.
அதே போல் பால் உற்பத்தியிலும் பெண்கள் குழு கவனம் செலுத்துவதன் மூலம் பால் உற்பத்தியை பெருக்குவதுடன், நெய் மற்றும் இனிப்பு வகையான பொருட்கள் உருவாக்குவதன் மூலம் உற்பத்தி திறன் கூடுவதால் பொருளாதார முன்னேற்றமும் கிடைத்திடும். மேலும் பட்டு வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்றவற்றின் மூலம் பெண்கள் அதிக வருமானத்தை பெற முடியும்.
எனவே ஒவ்வொரு ஊராட்சியிலும் பெண்கள் குழு அமைப்பதுடன் சிறப்பாக செயல்பட்டு மாவட்டத்தில் முற்றிலும் வறுமையை ஒழித்து பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்.
தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட 32 ஊராட்சிகளுக்கும் சுழல் நிதி ரூ. 40,000 வீதம் மொத்தம ரூ.12 லட்சத்து 80ஆயிரத்திற்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் புது வாழ்வுத்திட்ட இயக்குநர் போஸ் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கண்ணதாசன், மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக