அலீமக்தூம் மஹாயிமீ என்ற மகான் சிறுவராக இருந்த காலத்தில், ஒரு இரவில் அவருடைய தாயார், "மகனே! எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா,'' என்றார். மஹாயிமீ தண்ணீர் கோப்பையை நன்றாகக் கழுவி, தண்ணீர் முகரச் சென்ற போது, குடத்தில் தண்ணீர் இல்லை. எனவே, ஒரு கிணற்றுக்குப் போனார். அங்கிருந்து தண்ணீர் கொண்டு வந்தார்.
அவர் வருவதற்குள், தாயார் தூங்கி விட்டார். மஹாயிமீ விடிய விடிய அம்மாவின் அருகிலேயே தண்ணீர் கோப்பையுடன் நின்றார். காலையில் தாயார் கண்விழித்துக் கேட்டால், உடனே அவருக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதற்காகக் காத்திருந்தார்.
மறுநாள் காலை தாயார் கண் விழித்தார். தன் அருகில் மகன் தண்ணீர் கோப்பையுடன் நிற்பதைப் பார்த்தார். வியப்பு மேலிட, "மகனே! எவ்வளவு நேரம் இப்படி நிற்கிறாய்?'' என்று கேட்டார்.
"அம்மா! நேற்றிரவு தாங்கள் தண்ணீர் கேட்டீர்கள். நான் கொண்டு வருவதற்குள் உறங்கி விட்டீர்கள். விழித்தவுடன் கேட்டால் கொடுக்கலாம், தங்கள் அருகிலேயே உறங்காமல் காத்து நிற்கிறேன்,'' என்றார் மஹாயிமீ.
அந்தத்தாய் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். இறைவன் அதை ஏற்றுக்கொண்டான். "தாயின் காலடியிலேயே சொர்க்கம் இருக்கிறது' என்ற நபிகள் நாயகம் அவர்களின் பொன்மொழி இன்றைய சிந்தனையாக அமையட்டும்.
நன்றி : தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக