புதன், 25 ஜூலை, 2012

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா : கொடியேற்றம் வருகிற 26-ந் தேதி நடக்கிறது


     தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா கொடியேற்றம் வருகிற 26-ந் தேதி நடக்கிறது. இது குறித்து தூத்துக்குடி பனிமயமாதா ஆலய பங்குதந்தை வில்லியம் சந்தானம் நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- 

     தூத்துக்குடி பனிமயமாதா ஆலய பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி நிறைவடைகிறது. அன்னையை தரிசிக்க திருவிழா காலங்களில் வெளிநாடுகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும், நமது மாநிலத்தின் அனைத்து பகுதியில் இருந்தும், சாதி, மத, இன பாகுபாடு இன்றி அனைத்து மக்களும் வருகிறார்கள். 

     இந்த விழா சமய நல்லிணக்க விழாவாக கொண்டாப்பட்டு வருகிறது. மாதாவின் அருள் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும். விழாவையொட்டி காலை 7-30 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத்  திருப்பலி, கொடியேற்றம் நடக்கிறது. நண்பகல் 12 மணிக்கு பேராயர் ஆன்ட்ரூ டிரோஸ் அடிகளார் தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 

     விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 5-ந் தேதி காலை 7-30 மணிக்கு பெருவிழா கூட்டுத் திருப்பலி நடக்கிறது. இதில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் கலந்து கொள்கிறார். மேலும் மதியம் 12 மணிக்கு நடைபெறும் சிறப்பு நன்றி திருப்பலியில் திருச்சி மறை மாவட்ட பிஷப் அந்தோணி டிவோட்டா கலந்து கொள்கிறார். 

     தொடர்ந்து மாலை 5-30 மணிக்கு நடைபெறும் மாலை ஆடம்பர திருப்பலியில் மதுரை பிஷப் பீட்டர் பர்னாண்டோ தலைமையில் மாலை திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட காவல்துறை ஆகியோர் பேராலயத்தோடு இணைந்து விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 

     மேலும் இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா கொண்டாட்டம் நடந்து வருகிறது. இதில் பேராலாயத்தின் சார்பில் நிகழ்ச்சிகள் நடந்த ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அன்னையின் தங்கத்தேர் பவனி கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்றது. அடுத்த ஆண்டு தங்கத்தேர் ஓட முயற்சிகள் நடக்கிறது. இவ்வாறு பனிமயமாதா ஆலய பங்குதந்தை வில்லியம் சந்தானம் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக