சனி, 14 ஜூலை, 2012

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை! அவர் அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை!



*  நிலவு இரவை ஒளியுள்ள தாக்குகிறது. கதிரவன் பகலை  
   வெளிச்சமாக்குகிறது. தர்மத்தால் மூவுலகமும் பிரகாசம் பெறுகிறது.  
   அதுபோல நல்ல பிள்ளைகள் குடும்பத்தை விளங்கச் செய்கிறார்கள்.

*  தாய், தந்தை, மனைவி, மக்கள், சகோதரர்கள், நண்பர்கள் என்று நம் மீது  
   எத்தனையோ பேர் அன்பைப் பொழிகிறார்கள். இருந்தாலும் தாய் காட்டும் 
   அன்பே தலைசிறந்ததாகும்.

*  நம்மிடம் பற்று, ஆசை என்று இருவித குணங்கள் இருக்கின்றன. பற்று  
   என்பது நம்முடைய பொருளின் மீது காட்டுவதாகும். ஆசை என்பது 
   பிறருடைய பொருள் மீது வைப்பதாகும்.

*  ஆபரணம் பலவாக இருந்தாலும் அதில் இருக்கும் தங்கம் ஒன்றாக 
   இருப்பதைப் போல, உலகில் உடல் பலவானாலும் அதில் இருக்கும் உயிர் 
   அனைத்தும் ஒன்று என்பதை நாம் உணர வேண்டும்.

*  தன்னுடைய வயது, குடும்பப் பிணக்கு, மந்திரம், மருந்து, மனைவியின் 
   அன்பு, தானம், அவமானம் போன்ற விஷயங்களை மற்றவர்களிடமிருந்து 
   மறைப்பது நல்லது.

*  மகிழ்ச்சி, வீரம், தைரியம், கருணை, புத்திசாலித்தனம் முதலிய 
   நற்குணங்கள் நிறைந்திருக்கும் மனதில் தெய்வ அருளும் 
   குடிகொண்டிருக்கும்.

*  சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தர்மம் என்னும் 
   சகோதரன், கருணை என்னும் நண்பன், சாந்தி என்னும் மனைவி, 
   பொறுமை என்னும் பிள்ளை இவர்களே நமக்கு உற்ற உறவினர்கள்.

*  பெற்ற தாயை உள்ளன்புடன் ஒருதரம் வணங்குவதால் ஆறுதரம் பூமியை 
   வலம் வந்த புண்ணியமும், பத்தாயிரம் முறை காசியில் நீராடிய பலனும், 
   பலநூறு முறை சேதுக்கரையில் நீராடிய பலனும் கிடைக்கும். இத்தகைய 
   அன்னையின் தாமரைத் திருவடிகளை தினமும் வணங்க வேண்டும். 
   அவளுக்கு துன்பம் செய்பவர்களை மனிதவர்க்கத்தில் சேர்க்க முடியாது.

*  தர்மசிந்தனை, வெட்கம், தாட்சண்யம் போன்ற நற்குணங்கள் இல்லாத 
   மனிதர்களிடம் நட்பு வைத்துக் கொள்வது கூடாது.

*  புதிதாக கல்வி பயில்பவர்க்கு இரு குணங்கள் இருக்க வேண்டும். ஒன்று 
   குருபக்தி, மற்றொன்று மன அடக்கம். இந்த இரு குணங்களைக் 
   கொண்டவன் வாழ்வில் முன்னேற்றம் அடைவது உறுதி.

*  உதவும் மனப்பான்மை கொண்டவர்கள் யாருக்கு உதவி செய்கிறோம் 
   என்பதையும் சிந்தித்து செயல்பட வேண்டும். பாம்புக்கு பால் வார்ப்பது 
   போல தீயவர்களுக்கு உதவி செய்தால் தீமையே உண்டாகும்.

*  பொறுமை கடலைவிடப் பெரியது. உலகம் அழிந்தாலும் பொறுமை 
   மிக்கவரின் புகழ் என்றும் அழிவதில்லை.

*  ஒழுக்கத்துடன் வாழ்பவனே உண்மையான மனிதன். இல்லாவிட்டால் 
   மனித உடம்பெடுத்த விலங்கு என்றுதான் சொல்ல வேண்டும்.

*  பண்பட்ட மண்ணில் விழுந்த சிறுவிதை ஒன்றுக்கு ஆயிரமாக 
   விளைகிறது. அதுபோல, நல்லவர்க்குச் செய்த உதவி ஆயிரமாயிரம் 
   பயனைத் தரும்.

*  பிறரைக் கெடுத்து வாழ நினைப்பது ஆசை. தான் வாழ நினைப்பது பற்று. 
   தானும் தன்னைச் சார்ந்தவர்களும் வாழ நினைப்பது அன்பு. எல்லா 
   உயிர்களும் வாழ நினைப்பது அருள்.

*  உண்ணாமல் உறங்காமல் கூட இருந்து விடலாம். ஆனால், கடவுளை 
   ஒருபோதும் எண்ணாமல் இருக்கக் கூடாது.


வாரியார். நன்றி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக