தேர்வு மையங்களில் தேர்வு தொடங்குவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத்திற்கு 30 நிமிடங்கள் முன்னதாக தேர்வுக்கூடத்தில் தங்களது இருக்கையில் அமர வேண்டும். தேர்வு தொடங்கி 30 நிமிடங்கள் கழித்து வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே தேர்வு மையத்திற்கு தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே சென்று விடுவது நல்லது. இதன் மூலம் கடைசி நேர பரபரப்பைத் தவிர்க்கலாம்.
தேர்வு நேரம் முடிவதற்கு முன்னதாக தேர்வு எழுதுபவர்கள் விடைகளை எழுதி முடித்து விட்டால்கூட, தேர்வு நேரம் முடிவதற்கு முன்னதாக யாரும் தேர்வுக்கூடத்தை விட்டுச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வுக்கு வரும்போது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை (Hall Ticket) மறக்காமல் கொண்டுவர வேண்டும்.
புத்தகம், குறிப்பேடுகள், அகராதி, துண்டுக் காகிதங்கள், செல்போன், கைப்பெட்டிகள் போன்றவற்றை எடுத்துச் செல்லக்கூடாது. தேர்வுக் கூடத்திற்கு வெளியே வைத்து விட்டுதான் தேர்வு அறைக்குள் செல்ல வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூடத்தில் அவர்களது இருக்கையில் அமர்ந்த பிறகு கம்ப்யூட்டர் மூலம் தயாரிக்கப்பட்ட பெயர்ப் பட்டியலில் அவரது கையெழுத்தைப் பெற்றுக்கொண்டு ஓஎம்ஆர் விடைத்தாளை தேர்வுக்கூடக் கண்காணிப்பாளர் வழங்குவார். அப்போது அந்தப் பெயர்ப் பட்டியலில் உள்ள பெயர், பதிவு எண் ஆகியவற்றை சரிபார்த்துக்கொண்டு ஓஎம்ஆர் விடைத்தாளின் எண்ணை அவர் அப்போது எழுதப்போகும் தேர்வுத்தாளுக்கு எதிரே எழுதித் தன் கையெழுத்திட வேண்டும்.
விடைத்தாளைப் பெற்றதும் அது சரிவர அச்சடிக்கப்பட்டுள்ளதா என்பதையும் அதற்கு ஓர் எண் இருக்கிறதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளவும். விடைத்தாள் எந்த வகையிலும் குறைபாடுடையதாக இருந்தால் அதனை மாற்றிக் கொடுக்கும்படி கண்காணிப்பாளரிடம் கேட்கவும்.
பதிவு எண், பெயர், தேர்வின் பெயர், தேர்வு நாள், தேர்வுத்தாளின் பெயர், தேர்வுத்தாள் எண், தேர்வு மையத்தின் பெயர், மைய எண் ஆகியவற்றை நீலம் அல்லது கறுப்பு நிற பால்பாயிண்ட் பேனா கொண்டு விடைத்தாளில் கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும், விண்ணப்பதாரருக்குக் கொடுக்கப்பட்டுள்ள வினாத்தாள் வரிசையை (அதாவது ஏ, பி, சி, டி அல்லது 1, 2, 3, 4 என எண்கள் வரிசைப்படி என்று எது குறிப்பிடப்பட்டுள்ளதோ) விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள இடத்தில் குறிப்பிட வேண்டும்.
தேர்வு நேரம் தொடங்கும் நேரத்தில் தேர்வுக்கூட கண்காணிப்பாளர் வினாத் தொகுப்பைத் திறக்கும்படி கூறும் வரையில் அதைத் திறந்து பார்க்கக் கூடாது. விடைத்தாளில் விடைகளைக் குறித்துக் காட்ட நீலம் அல்லது கறுப்பு நிற பால்பாயிண்ட் பேனாவையே உபயோகிக்க வேண்டும். விடைத்தாளில் விடைகளை நிரப்பிக்காட்ட பென்சிலைப் பயன்படுத்தக் கூடாது. பென்சிலைக் கொண்டு விடைகள் நிரப்பப்பட்டிருந்தால் விடைத்தாள் செல்லாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு வினாவுக்கும் கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளில் ஒரு விடை மட்டுமே சரியானதாக அல்லது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். அனைத்து விடைகளையும் விடைத்தாளில் தொடர்புடைய கட்டங்களில் மட்டுமே குறிக்க வேண்டும். ஒவ்வொரு வினாவுக்கும் ஒரே விடையை மட்டுமே குறித்துக்காட்ட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் குறித்துக் காட்டப்பட்டிருந்தால் அந்த வினாவுக்கு மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது.
விடைத்தாளில் அழித்தல், திருத்தல் போன்றவற்றுக்கு அனுமதி இல்லை. எனவே, ஒரு வினாவுக்கான சரியான விடை எது என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே, அதற்குரிய கட்டத்தை பேனா கொண்டு நிரப்ப வேண்டும். விடைத்தாளில் விடைகளைத் தவிர, எந்தவிதக் குறிப்புகளையும் எழுதக்கூடாது. குறிப்பேடுகளைக் கொண்டு வருபவர்களும் அதனைப் பார்த்து எழுதுபவர்களும் தேர்வுக்கூடத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
தேர்வு அறையில் தேர்வு எழுதுபவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக்கூடாது. தேர்வு நேரத்தில் யாராவது ஒருவருக்கொருவர் பேசுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப் படுவார்கள். தேர்வு அறையில் மற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து பொருட் களையோ, கருவிப் பெட்டிகளையோ வாங்கக் கூடாது. தேர்வு அறையில் காபி, தேநீர், குளிர் பானங்கள் போன்றவை வழங்கப்பட மாட்டாது.
வினாத்தாள் வழங்கப்பட்டதும், முதலில் நன்கு தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை அளிக்கவும். தெரியாத கேள்விகளுக்கு விடையளிக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டால், பிறகு தெரிந்த கேள்விகளுக்கு விடையளிக்க நேரம் இல்லாமல் போய் விடலாம். தெரியாத கேள்விகளுக்கான விடைகளை கடைசியில் குறிக்கலாம்.
தேர்வை எழுதி முடித்ததும் தேர்வுக்கூடக் கண்காணிப்பாளரிடம் விடைத்தாளைக் கொடுத்த பிறகே, தேர்வு எழுதுபவர்கள் தேர்வு அறையிலிருந்து வெளியேற வேண்டும். தேர்வு முடிந்த பிறகு, தேர்வு எழுதியவர்கள் வினாத் தொகுப்பை எடுத்துச் செல்லலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக