புதன், 25 ஜூலை, 2012

குழந்தையை வீசி சென்ற கல் நெஞ்சக்காரி யார்?


     கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பஸ் நிலைய வளாகத்தில் திருப்பூர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பொது கழிப்பிடம் அருகில் கேட்பாரற்று அனாதையாக, மரக்கட்டை கைப்பிடியால் ஆன ஒரு பை கிடந்தது.

     திடீரென அந்த பையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த பஸ் பயணிகள் உடனே இதுபற்றி மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரியப்படுத்தினார்கள். 

     போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள். அனாதையாக கிடந்த பையை பிரித்து சோதனை செய்தார்கள். சோதனையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் பச்சிளங்குழந்தை ஒன்று துணியால் சுற்றப்பட்டு கிடந்தது.

     உடனே போலீசார் பச்சிளங்குழந்தையை பத்திரமாக மீட்டு, இரவோடு இரவாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) டாக்டர் இளஞ்செழியன் தலைமையில் மருத்துவக்குழுவினர் குழந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை அளித்து பராமரித்து வந்தனர். 

     இதுபற்றி பொள்ளாச்சியில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து காப்பக ஒருங்கிணைப்பாளர் என். சுமதி, வார்டன் தமிழரசி ஆகியோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். 

     போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் திலக் முன்னிலையில் பச்சிளம் பெண் குழந்தை, காப்பக நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பச்சிளம் பெண் குழந்தையை வீசி சென்ற கல் நெஞ்சக்காரி யார்? குழந்தையை வீசிச் சென்ற காரணம் என்ன? கள்ளக்காதலில் பிறந்ததா? அல்லது பெண் குழந்தை பிறந்ததால் வீசிச் சென்றனரா? என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக