திரைப்படங்களில் சமீப காலமாக மது, மற்றும் புகை பிடிக்கும் காட்சிகள் பெருகி வருகின்றன. மதுபான சீன்களையும் அதிகம் வைக்கிறார்கள். மதுக்கடை பார்களில் பாடல் காட்சிகள் வைத்தும் எடுக்கிறார்கள்.
சகுனி படத்தில் வரும் போட்டது பத்தல இன்னுமொரு குவார்ட்டரு சொல்லுங்கடா பாடலும், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் வரும் வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு பாடலும், கலகலப்பு படத்தில் வரும் இவளுக இம்சை தாங்க முடியல பாடலும் மதுக்கடை பின்னணியில் எடுக்கப்பட்டன.
முழுக்க முழுக்க குடிகாரர்களை மையமாக வைத்து மதுபான கடை என்ற பெயரிலும் படம் தயாராகிறது. திரைப்படங்களில் மது குடித்தல் மற்றும் புகை பிடிக்கும் காட்சிகளுக்கு தணிக்கை குழு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இது குறித்து சென்னை திரைப்பட தணிக்கை குழு அதிகாரி பக்கிரிசாமி கூறியதாவது.
மது மற்றும் புகை பிடிக்கும் காட்சிகளை படங்களில் வைப்பதற்கு சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. படம் நன்றாக இருந்து குறைந்த அளவு மது அருந்தும் சீன்கள் இடம் பெற்றால் இப்படங்களுக்கு “யுஏ” சான்றிதழ் அளிக்கப்படுகிறது.
ஆனாலும் டெலிவிஷன்களில் ஒளிபரப்பப்படும் பாடல் மற்றும் விளம்பர டிரெய்லர்களில் இது போன்ற காட்சிகள் இடம் பெற அனுமதிப்பது இல்லை. யாரேனும் மீறி இந்த காட்சிகளை ஒளிபரப்பு செய்தால் அது விதி மீறல் ஆகும். இதுகுறித்து பொது மக்கள் எங்களிடம் புகார் செய்யலாம்.
புகை மற்றும் மது அருந்தும் காட்சிகள் படத்தில் இடம் பெறும் போது உடல் நலத்துக்கு தீங்கானது என்ற வாசகங்களுடன் சப் டைட்டில் போட தணிக்கை குழு அறிவுறுத்தி உள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்து உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக