வெள்ளி, 13 ஜூலை, 2012

என் மகளை ராகுல் மணமுடித்தால் ரூ.15 கோடி தரத்தயார் : டில்லி பெண் அறிவிப்பு.



     தன் மகளை காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் திருமணம் செய்யவேண்டும். அவ்வாறு திருமணம் செய்தால் வரதட்சணையாக 15 கோடி ரூபாய் வழங்குவேன். திருமணம் செய்ய மறுத்தால், காலவரையற்ற மவுன விரதம் இருப்பேன் என்று கூறி, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், டில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

     ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஓம் சாந்தி சர்மா. இவர் 9ம் தேதி முதல், டில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் காலவரையற்ற மவுன விரதம் மேற்கொண்டுள்ளார். அவர் தன் இருக்கைக்கு பின்னால், தனது போராட்டம் குறித்த அறிவிப்பு பலகை ஒன்றை வைத்துள்ளார். அதில், தன் மகளை ராகுல் திருமணம் செய்யவேண்டும். அதற்கு அவர் ஒப்புக் கொண்டால், அவருக்கு வரதட்சணையாக 15 கோடி ரூபாய் அளிப்பேன். அவர் திருமணம் செய்ய மறுத்தால், காலவரையற்ற மவுன விரத போராட்டம் நடத்துவேன். 

     ஜெய்ப்பூரில் உள்ள சொத்துக்களில் எனக்குரிய பங்கை என் குடும்பத்தினர் தரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஓம் சாந்தி சர்மா தொடர்ந்து மவுன விரதம் இருந்து வருவதால், அவர் யாருடனும் பேசுவதில்லை. அவரின் பின்னால் எழுதி வைக்கப்பட்டுள்ள பலகையைப் பார்த்து அவர் எதற்காக உண்ணாவிரதம் இருக்கிறார் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

     சாந்தி சர்மா அருகே சந்தோஷ் முராத் என்பவரும் போராட்டம் நடத்தி வருகிறார். அவர் இறந்து விட்டதாக அவரது உறவினர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். அதற்கான ஆதாரங்களை அளிக்கவேண்டும் எனக்கோரி, அவரும் போராட்டம் நடத்தி வருகிறார். 

     மவுன விரதம் இருந்து வரும் ஓம்சாந்தி சர்மா குறித்து சந்தோஷ் முராத் கூறுகையில், 'சாந்தி சர்மா போராட்டம் துவக்கிய நாளில் இருந்து பிரார்த்தனை செய்து வருகிறார். அவர் மவுனமாக இருப்பது என உறுதி மேற்கொண்டுள்ளார். அவர் எழுதியோ, பேசியோ எதுவும் தெரிவிப்பதில்லை' என்றார்.

     இந்த நூதன போராட்டம் குறித்து டில்லி நகர கூடுதல் துணை கமிஷனர் துவேதி விளக்கம் அளிக்க மறுத்து விட்டார். போலீஸ் அதிகாரிகளோ, 'ஓம்சாந்தி சர்மா தன் போராட்டம் தொடர்பாக, போலீசாரிடம் இருந்து எந்த அனுமதியும் பெறவில்லை. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் உள்ளார்' என்றனர். நகரில் விடாது பெய்து வரும் மழையிலும், தனது மகளுக்கு நல்ல வரனை தருமாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகிறார் இந்த தாய்.

நன்றி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக