புதன், 25 ஜூலை, 2012

2008, 2009, 2010-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை.


     வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்பேரில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி. த. செல்லப்பாண்டியன் தலைமையில் நடந்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து 2008, 2009 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு முறை புதுப்பித்து கொள்ள சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது.

     இச்சலுகையை பெற விரும்பும் மனுதாரர்கள் அரசாணை வெளியிடப்படும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகவோ தங்கள் பதிவினைப் புதுப்பித்துக்கொள்ளலாம். 18.10.2012-க்குப்பின் பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.

     1.01.2008-க்கு முன் புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேற்குறித்த காலக்கட்டத்தில் தங்களது பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாக 18.10.2012-க்குள் தங்களது பதிவினை புதுப்பித்துக்கொள்ளலாம்.

     இணையதளம் மூலம் பதிவினை புதுப்பிக்க இயலாதவர்கள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டையின் நகலுடன் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமோ மனு செய்துகொள்ளலாம்.


இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக