ரேசன் கடையில் மக்களுக்கு வினியோகம் செய்யாமல் உணவு பொருட்கள் அதிக விலைக்கு, மளிகைக் கடைக்கு விற்கப்படுவதாக, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசாரின் அதிரடி "ரெய்டில்' அம்பலமாகியுள்ளது.
தமிழக அரசின் பொது வினியோகத்திட்டத்தில், ரேஷன் கடைகளுக்கு பொதுமக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் அனுப்பப்படுகிறது. இதில் இலவச அரிசியை, கேரள மாநிலத்திற்கு லாரி மூலம், கடத்தி செல்வது மட்டுமே மக்களுக்கு தெரியும்.
இதேபோல், கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளில், வினியோகம் செய்யப்படும் பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்களும் மளிகைக்கடைகளுக்கு விற்பனை செய்வது, தற்போது வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதற்காக, ரேஷன் ஊழியர் மற்றும் இடைத்தரகர்கள், மளிகைக் கடை உரிமையாளர்கள் கைகோர்த்துள்ளனர். உணவுப்பொருள் கடத்தல் பிரிவு தடுப்பு புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை கூறியதாவது :
கோவை, தடாகம், 24 வீரபாண்டி பகுதியிலுள்ள விழுதுகள் மகளிர் சுய உதவிக்குழு நடத்தும் ரேஷன் கடையிலிருந்து, மக்களுக்கு வினியோகம் செய்யவேண்டிய பொருட்களை, அங்குள்ள மளிகைக்கடைக்கு விற்பனை செய்துள்ளனர்.
இத்தகவல் கிடைத்ததும், மளிகைக் கடையில் இருந்த, பாமாயில் 16 பாக்கெட், அரிசி 350 கிலோ, பருப்பு 25 கிலோ, சர்க்கரை 20 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மளிகைக் கடைக்காரர் சிவசிதம்பரத்தை, 40, கைது செய்து விசாரித்தபோது, ரேஷன் பொருட்களை, கடையின் விற்பனையாளர் மளிகைக்கடைக்கு விற்றது தெரியவந்தது. இவர் தற்போது தலைமறைவாக உள்ளார்.
கணபதி, நல்லாம்பாளையத்தில் ஒரு மளிகைக் கடையில் ரெய்டு நடத்தி, ரேஷன் அரிசி 350 கிலோ, மண்ணெண்ணெய் 25 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர், ஆனந்த பெருமாள், 23, கைது செய்யப்பட்டார்.
இவரிடம், ரேஷன் பொருட்களை விற்ற கவுண்டம்பாளையம், சங்கனூர் கூட்டுறவு சங்க ரேஷன் கடை விற்பனையாளர் மோகன்குமார், 52, கைது செய்யப்பட்டார்.இவ்வாறு, இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தெரிவித்தார்.
கோவை தெற்கு மற்றும் பொள்ளாச்சி பகுதி புலனாய்வு இன்ஸ்பெக்டர் முருகவேல் கூறியதாவது : கோவை பூமார்க்கெட் ராமலிங்கசவுடேஸ்வரி கூட்டுறவு விற்பனை சங்க ரேஷன் கடையில் இருந்து, மொபட்டில் அரிசி கடத்திய திருமால் வீதியைச் சேர்ந்த அக்தரை, 36, கைது செய்து, 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அரிசியை, கிலோ ஐந்து ரூபாய் வீதம் விற்ற, விற்பனையாளர் சாந்தா, 57, கைது செய்யப்பட்டார்.
சுந்தராபுரத்திலுள்ள மாவட்ட அரிஜன கூட்டுறவு பண்டகசாலை கடையில் இருந்து, விற்பனையாளர் கிருஷ்ணகுமார், 47, இடைத்தரகர் லிங்கம், 54, உதவியுடன் போலி ரேஷன்கார்டுகளுக்கு அரிசி வாங்கிய 16 வயது சிறுவனை கைது செய்தோம்.
இவனது தந்தை மீது ஏற்கனவே மூன்று அரிசி கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது. போலி ரேஷன் கார்டுகள் பற்றி, கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டு, அவற்றை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. இவ்வாறு, இன்ஸ்பெக்டர் முருகவேல் தெரிவித்தார்.
கோவையில் இதுவரை ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கல் தொடர்பாக, ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூன்று பேர், இடைத்தரகர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். 24 வீரபாண்டி ரேஷன் கடை விற்பனையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
விற்பனையாளர்கள் நான்கு பேரும் பணியில் இருந்து "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக