கொல்கத்தா :ஐந்தாம் வகுப்பு சிறுமியை சிறுநீர் குடிக்க சொன்ன விவகாரம் தொடர்பாக பள்ளியை நடத்தும் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் சாந்திநிகேதனில் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறைவிடப்பள்ளி பதா பவன்.
மொக்ராம்பூர் கிராமத்தை சேர்ந்த புனிதா சிங் என்ற 10 வயது மாணவி இங்கு ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தார். இவருக்கு படுக்கையிலேயே சிறுநீர் போகும் பழக்கம் உள்ளது. கடந்த 8ம் தேதி இரவு படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஹாஸ்டல் வார்டன் உமா பொட்டார், படுக்கையில் ஓடிய சிறுநீரை பிடித்து குடிக்குமாறு உத்தரவிட்டார். அதிர்ச்சியும், அவமானமும் அடைந்த புனிதா மறுநாள் இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்தார்.
அவர்கள் போலீசில் புகார் கொடுத்ததை தொடர்ந்து வார்டன் கைது செய்யப்பட்டு உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
படுக்கையில் சிறுநீர் கழிப்பவர்களை சிறுநீர் குடிக்கச் சொன்னால் அந்த பழக்கம் அவர்களை விட்டு போய்விடும். இதனால் பெற்றோரின் சம்மதத்துடன் புனிதாவை திருத்தும் நோக்கில் அவரை சிறுநீர் குடிக்கச் சொன்னதாக வார்டன் தெரிவித்தார். இதனை புனிதாவும், அவரது பெற்றோரும் மறுத்தனர். தொடர்ந்து அந்த பள்ளியில் படிக்க விருப்பம் இல்லை என மாணவி புனிதா தெரிவித்தார்.
இந்நிலையில் நடந்த சம்பவத்துக்கு விஸ்வபாரதி பல்கலைக்கழகம் மன்னிப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் மணிமுகுத் மித்ரா வெளியிட்டுள்ள அறிக்கை: மாணவி புனிதாவுக்கு ஏற்பட்டுள்ள மோசமான அனுபவத்துக்கு விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது.
உறைவிடப் பள்ளியில் தங்கி படிக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தாலும், மாணவி புனிதாவுக்காக விதிமுறைகளை தளர்த்திக் கொண்டு, அவர் தினசரி பள்ளிக்கு வந்து போக அனுமதிப்பது என முடிவு செய்துள்ளோம். மாணவி புனிதா மீண்டும் பள்ளிக்கு வரவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக