புதன், 25 ஜூலை, 2012

பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு 150 கேள்விகளுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியீடு.


     ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த 12-ந்தேதி தமிழகம் முழுவதும் நடந்தது. இந்த தேர்வை 6 லட்சத்து 56 ஆயிரம் பேர் எழுதினார்கள். காலையில் தாள்-1, பிற்பகல் தாள்-2 தேர்வுகள் நடைபெற்றன. இரண்டு தேர்வுகளிலும் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கூறினார்கள்.

     கேட்கப்பட்ட 150 கேள்விகளுக்கு 90 நிமிடத்தில் விடையளிக்க இயலவில்லை. போதிய கால அவகாசம் இல்லாததால் முழுமையாக எழுத முடியவில்லை என பட்டதாரி ஆசிரியர்கள் கண்ணீர் விட்டனர். 150 வினாக்களுக்கு உரிய விடைகள் இணைய தளத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

     தேர்வு எழுதியர்களில் பெரும்பாலானவர்கள் சரியாக எழுதவில்லை என்றே கருத்து தெரிவித்தனர். ஆனாலும் தேர்வு வாரியம் வெளியிடும் விடைகளை பார்க்க ஆர்வமாக இருந்தார்கள். இந்த நிலையில் இன்று (செவவாய்க்கிழமை) காலை 7 மணிக்கு பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு (தாள்-2)க்கான விடைகள் இணைய தளத்தில் பாடம் வாரியாக விடைகள் வெளியிடப்பட்டுள்ளன.

     தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், உருது, கணிதம், அறிவியல் என தனித்தனியாக விடைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒரு சில பாடங்களுக்கான விடைகளை இணையதளத்தில் பார்க்க முடியவில்லை. இதனால் பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். http://www.trb.tn.nic.in என்ற இணையதளம் வழியாக விடைகளை பார்க்க முயன்றவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கான விடைகளையும் பார்க்க இயலவில்லை.

     சிலர் இந்த இணைய தளத்தில் நுழைய முடியவில்லை. சாப்ட்வேர் கோளாறு காரணமாக அந்த இணைய தளம் திறக்கப்படவில்லை. இதனால் ஏராளமான பட்டதாரிகள் விடைகள் பார்க்க முடியாமல் சிரமப்பட்டனர். நகர் பகுதிகளில் உள்ள கம்ப்யூட்டர் மையங்களுக்கு சென்று விடைகளை பார்க்க ஆர்வத்துடன் சென்றனர். இதன் காரணமாக கம்ப்யூட்டர் மையங்களில் இன்று கூட்டம் நிரம்பி வழிந்தது.

     ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பட்டதாரிகள் தேர்வு வாரிய இணைய தளத்தை முற்றுகையிட்டதால் இந்த பிரச்சினை ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக