செவ்வாய், 3 ஜூலை, 2012

ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு உணவு கட்டணம் ரூ.2 ஆயிரமாக உயர்வு : அரசு உத்தரவு


     சென்னை: அகில இந்திய குடிமை பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களின் உணவு கட்டணம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை : மத்திய அரசு பணியாளர் தேர்வாணை யத்தினால் நடத்தப்படும் அகில இந்திய பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில், தமிழக மாணவ, மாணவியர் கலந்துகொள்கின்றனர். இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்திய காவல் பணி போன்ற பணிகளுக்கு நம் மாணவர்கள் அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை அண்ணா நகரில், தமிழக அரசால் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது.

     இந்த மையத்தில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு உணவுக் கட்டணத்தை சென்ற ஆண்டு 1200 ரூபாயாக உயர்த்தி முதல்வர் உத்தரவிட்டார். தற்போது, பயிற்சி மாணவ, மாணவியருக்கான உணவுக் கட்டணத்தை 2000 ரூபாயாக உயர்த்தியும், இனி வரும்காலங்களில், உணவு கட்டணத்தை ஆண்டுதோறும் ஐந்து விழுக்காடு உயர்த்துவதற்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

     மேலும், அரசின் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் வகையில், ஊக்கத் தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.3000 வீதம் 3 மாதங்களுக்கு 200 மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் டெல்லியில் நடைபெறும் நேர்முக தேர்வில் பங்கு கொள்ளும் பயிற்சியாளர்களுக்கு, பயணச் செலவினமாக தலா ரூ.2000 வழங்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக