ஞாயிறு, 22 ஜூலை, 2012

ஹேக்கர்கள்


     ஜிமெயில், குரோம் பிரவுசர், யுட்யூப், கூகுளின் தேடல் சாதனம் என கூகுள் சாதனத்தைப் பயன்படுத்தி இணையத்தில் உலா வருகையில், நாம் பார்க்க விரும்பும் இணைய தளத்தில் நம்மை செயல் இழக்கச் செய்திடும், அல்லது மோசமான விளைவுகளைத் தரும் புரோகிராம்கள் கொண்ட இணைய தளங்கள் இருப்பின், உடனே அது குறித்து எச்சரிக்கை ஒன்றை கூகுள் தருகிறது. குறிப்பிட்ட தளத்தினைத் திறக்காமல் நம்மைக் காப்பாற்றுகிறது.

     இது போல நாள் ஒன்றில் ஏறத்தாழ 9,500 தளங்களைக் கண்டறிவதாக, கூகுள் தன் வலைமனையில் http://googleonlinesecurity.blogspot.in/2012/06/safe-browsing-protecting-web-users-for.html தெரிவித்துள்ளது. இது மட்டுமின்றி, நாள் ஒன்றில், கூகுள் ஏறத்தாழ ஒரு கோடி அல்லது 1.2 கோடி தேடல்களுக்குப் பதில் அளிக்கிறது. பதிலாகப் பட்டியலிடப்படும் தளங்களில், மால்வேர்களால் பாதிக்கப்பட்ட தளங்களும் இடம் பெறுகின்றன. 

     நாள் ஒன்றுக்கு டவுண்லோட் செய்யப்படும் நிகழ்வுகளில், 3 லட்சம் பேருக்கு எச்சரிக்கை செய்தியினை குரோம் பிரவுசர் தந்து வருகிறது. இவற்றில் பல தளங்கள் ஒரு மணி நேரம் தான் இணையத்தில் இயங்குகின்றன. தங்களிடம் சிலர் மாட்டிக் கொண்ட பின்னர், தாங்கள் பிடிபடுவதிலிருந்து தப்பிக்க, தளத்தையே சர்வரிலிருந்து எடுத்து விடுகின்றனர். 

     இந்த தளங்கள் ஹேக்கர்களால் கைப்பற்றப்பட்டவையாக இருக்கலாம். அல்லது வைரஸ் அல்லது கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை பரப்பிடும் தளங்களாக இருக்கலாம். குரோம், பயர்பாக்ஸ் மற்றும் சபாரி பிரவுசர்களைப் பயன்படுத்தும் 60 கோடி பேர், ஒவ்வொரு நாளிலும், பல லட்சக்கணக்கான எண்ணிக்கையில் எச்சரிக்கை செய்திகளைப் பெறுகிறார்கள். 

     கூகுள் பயன்படுத்துவோர், புரோகிராம்களை, இணையப் பக்கங்களை டவுண்லோட் செய்திட முயற்சிக்கையில், அவற்றில் ஆபத்து தரும் புரோகிராம்கள் இருப்பின், கூகுள் உடனே எச்சரிக்கை மூலம் தடுக்கிறது. நாளொன்றுக்கு 3 லட்சம் பேர் இவ்வாறு காப்பாற்றப்படுகின்றனர்.

     தினந்தோறும், இணைய தள நிர்வாகிகளுக்கும், இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும், மால்வேர் குறித்த செய்தியை அனுப்பி, அவர்களின் வாடிக்கையாளர்களை அவற்றிலிருந்து காப்பாற்றும்படி எடுத்துரைக்கிறது கூகுள். வாடிக்கையாளர்களைச் சிக்க வைத்திடும் இணையப் பக்கம் காணப்பட்டால், அவற்றை உடனே நீக்கிடும் பணியில் கூகுள் ஈடுபடுகிறது. 

     இவற்றுடன் தன் குரோம் வெப் ஸ்டோரில் கிடைக்கும் குரோம் எக்ஸ்டென்ஷன் மற்றும் ப்ளக் இன் புரோகிராம்களை ஸ்கேன் செய்து, தவறானவற்றை உடனடியாக நீக்குகிறது.

     இணையத்தை கூடுதல் பாதுகாப்பு கொண்டதாக ஆக்குவதே எங்களின் லட்சியம் என கூகுள் கட்டமைப்பு குழுவின் முதன்மை சாப்ட்வேர் பொறியாளர் நீல்ஸ் ப்ரவோஸ் குறிப்பிட்டுள்ளார். மால்வேர் மற்றும் பிஷ்ஷிங் புரோகிராம்களைக் கண்டறிந்து நீக்க, பல மேம்படுத்தப்பட்ட புரோகிராம்கள் தொடர்ந்து கிடைத்து வந்தாலும், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள், முழுக் கவனத்துடன் செயல்பட வேண்டும். 

     சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில், ஏதேனும் தளம் அல்லது புரோகிராம் இருந்தால், அசட்டுத் தைரியத்துடன் அதனைச் சந்திக்காமல், கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு அவை குறித்த தகவல்களை அனுப்ப வேண்டும். அப்போதுதான் உங்கள் கம்ப்யூட்டர் உங்களுக்கு நன்றிக் கடனுடன் செயல்படும் என வேடிக்கையாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக