ஞாயிறு, 15 ஜூலை, 2012

100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் தாமதம்: பிரதமர் கவலை



     ""தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) பணியாற்றுவோருக்கு, குறித்த நேரத்தில் சம்பளம் கிடைப்பது இல்லை, என்ற புகார் எழுந்துள்ளது. இந்த பிரச்னைக்கு, விரைவில் தீர்வு காண வேண்டும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

     மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டம் குறித்து, ஆய்வு செய்யப்பட்ட, நூல் வெளியீட்டு விழா, டில்லியில் நேற்று நடந்தது. இதில், பிரதமர் பேசியதாவது : தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டம், ஐ. மு., கூட்டணி அரசின் முன்னோடி திட்டம். 

     இந்தத் திட்டம் செயல்படும் விதம், எனக்கு முழு திருப்தி அளிப்பதாக இல்லை. இந்தத் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் தாமதமாக வழங்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இந்தப் பிரச்னைக்கு, விரைவில் தீர்வு காண வேண்டும். 

     இந்தத் திட்டத்தின் கீழ், பல கோடி பேர் பயன் பெறும் வகையில், இதுவரை 1.10 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு திட்டம் வெற்றிகரமாக செயல்படுவதற்கு, உள்ளாட்சி அமைப்புகள், போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம், இனப் பாகுபாடு குறைந்துள்ளது. 

     இதில் பணிபுரியும் பெண்கள், வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வருவது, அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது பாராட்டத்தக்கது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக