ஒரு மரத்தில் பல பறவைகள் பாதுகாப்பாகத் தங்கின. அது ஒரு பழமரம் என்பதால், வேண்டிய அளவு பழங்களைச் சாப்பிட்டு சந்தோஷமாக காலம் கழித்தன.
எந்த ஒரு பொருளுக்கும் உலகில் ஆயுள் நிர்ணயம் உண்டல்லவா! சில நூறு வருடங்கள் பல தலைமுறை பறவைகள் அதில் வசித்தன. ஒரு சமயம் மரம் பட்டுப்போனது. எல்லாப் பறவைகளும் அதில் இருந்து வேறு மரங்களைத் தேடிச் சென்று விட்டன. ஒரு கிளி மட்டும் அந்த மரத்தை விட்டு அகலவில்லை.
உணவின்றியும், நிழலின்றியும், பாதுகாப்பின்றியும் சிரமப்பட்டாலும் கூட அவற்றைப் பொறுத்துக் கொண்டு அங்கேயே வசித்தது. ஒரு சமயம், தேவர்களின் தலைவன் இந்திரன் அங்கு வந்தான். கிளியிடம், பச்சை மரங்கள் பல இருக்க பட்ட மரத்தில் தங்கியிருக்க காரணம் கேட்டான்.
"இந்திரரே! எனது மூதாதையர் இங்கு தான் வசித்தனர். அவர்கள் அனைவருக்கும் இந்த மரமே உணவும் அடைக்கலமும் தந்தது. அந்த நன்றியை எப்படி என்னால் மறக்க இயலும்! எங்களை வளர்த்த இந்த மரத்திற்கு இப்போது கஷ்டம் வந்ததும், அதை கைவிட்டுப் போனால் நன்றி மறந்தவன் ஆகமாட்டேனா?'' என்றது. இந்திரன் மகிழ்ந்தான்.
அந்த கிளியிடம், "உன் நல்ல மனதுக்கு வரம் தருகிறேன். கேள்,'' என்றான். "இந்த மரம் மீண்டும் பசுமையுடன் திகழ வேண்டும். முன்பை விட செழித்து நிறைந்த கனிகளுடன் விளங்க வேண்டும்,'' என்றது கிளி. இந்திரனும் அவ்வாறே செய்தான்.
பிறர் செய்த உதவியை ஏற்றவர்கள் அவர்களுக்கு கஷ்டம் வரும் போது, கைகொடுத்து காக்க வேண்டும் என்பது இந்தக் கதை சொல்லும் நீதி.
நல்ல கதை...
பதிலளிநீக்கு