பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு பெருமை சேர்ப்பது, தேம்ஸ் நதி. சல சலத்து ஓடும் தேம்ஸ் நதியையும், எழில் மிகுந்த கட்டடங்களுடன் காட்சி அளிக்கும் லண்டன் நகரையும், இரவு நேரத்தில், மின் விளக்குகளின் வெளிச்சத்தில் பார்ப்பது, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரும்.
தற்போது லண்டன் நகரின் அழகுக்கு, மேலும் அழகு சேர்க்கும் வகையில், ஐரோப்பாவிலேயே மிக உயரமான கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது. 'ஷார்ட் டவர்' என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த கட்டடம், 1,016 அடி உயரமுள்ளது. 72 தளங்கள் இதில் உள்ளன.
இதன் புறத்தோற்றம் முழுவதும், ஆறு லட்சம் சதுர அடி பரப்பிலான, கண்ணாடிகளால் மூடப்பட்டுள்ளது. இவை, எட்டு கால்பந்து மைதானங்களுக்கு சமமான பரப்பளவு.
கோபுரத்தின் அடித்தளத்தில் இருந்து, உச்சிக்கு செல்வதற்காக, 44 லிப்ட்கள் உள்ளன. இதன் அடித்தளம், 'பப்ளிக் ஏரியா' என, பெயரிடப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக, பிரத்யேக வசதிகளுடன் உருவாக்கப் பட்டுள்ளது. இரண்டாவது தளத்தில் ஷாப்பிங் மால்கள் உள்ளன. நான்காவது தளத்தில் இருந்து, 28-வது தளம் வரை, அலுவலகங்கள் உள்ளன.
அடுத்து, 31-வது தளத்தில் இருந்து, 33-வது தளம் வரை, சர்வதேச அளவில் பிரபலமான ஓட்டல் நிறுவனங்கள் செயல்படுகின்றன. 34-ல், இருந்து, 52-வது தளம் வரை, அழகு நிலையங்கள், 'ஸ்பா'க்கள் செயல்படுகின்றன. 53-ல், இருந்து, 65-வது தளம் வரை, குடியிருப்புகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 68-லிருந்து, 72-வது தளம் வரை, பார்வையாளர் மாடத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அடித்தளத்தில் இருந்து, கோபுரத்தின் உச்சிக்கு சென்று, லண்டன் நகரின் அழகை பார்வையிடுவதற்கு, கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட குடும்பத்தினருக்கு, 7,482 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இதன் திறப்பு விழா, இரவு நேரத்தில் நடந்தது. லேசர் ஒளி வெள்ளத்தில், ஷார்ட் கோபுரம், சொர்க்கம் போல் காணப்பட்டது. இதைக் காண்பதற்காக, ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டு, அந்த பகுதியில் மிகப் பெரிய போக்குவரத்து நெருக்கடியே ஏற்பட்டு விட்டது.
இந்த அழகு அதிசயத்தை கட்டுவதற்கு, 430 கோடி ரூபாய் செலவிட்டதாக கூறுகின்றனர். ஆனால், அதை விட, பல நூறு கோடி ரூபாய் அதிகமாக செலவிட்டுள்ளதாக, பிரிட்டனில் பேச்சு அடிபடுகிறது. கோபுரத்தின் சிறப்பு குறித்து, அதன் நிர்வாகிகள், 'மேக மூட்டம் இல்லாத தெளிவான வானிலையின்போது, ஷார்ட் கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால், அருகில் உள்ள பிரான்ஸ் நாட்டின் சில பகுதிகளை பார்க்க முடியும்' என்கின்றனர்.
இடது பக்கம் புகழ்பெற்ற கதீட்ரல் தேவாலயம், வலது பக்கம் இயற்கை எழில் கொஞ்சும் தேம்ஸ் நதி, ஆகியவற்றுக்கு நடுவில், மிக பிரமாண்டமாக, காற்றுடன் கவிதை பாடிக் கொண்டிருக்கும் ஷார்ட் கோபுரத்துக்கு, ஒரு நடை போய் விட்டுத் தான் வாருங்களேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக