நித்யானந்தாவிடம் மருத்துவ பரிசோதனை செய்ய, வரும், 22-ம் தேதி வரை தடை விதித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'நித்யானந்தா - ரஞ்சிதா வழக்கில் உண்மை நிலை தெரிய வேண்டுமானால், நித்யானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால், நித்யானந்தா ஒத்துழைப்பு தரவில்லை' என, கர்நாடக சி.ஐ.டி., போலீசார், ராம்நகர் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
இதையடுத்து ஜூலை, 30-ல் நித்யானந்தாவுக்கு, பெங்களூரு விக்டோரியா மருத்துமனையில், மருத்துவ பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், நித்யானந்தா பெங்களூரு வராமல், தன் சீடர்கள் மற்றும் நடிகை ரஞ்சிதாவுடன் மானசரோவருக்கு புனித யாத்திரை சென்று விட்டார். 'நீதிமன்ற உத்தரவை அவமதித்த நித்யானந்தாவை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து, மருத்துவ பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என, ராம்நகர் நீதிமன்றத்தில் சி.ஐ.டி., போலீசார் கோரினர். இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
ராம்நகர் நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு எதிராக வந்து விடக்கூடாது என்பதற்காக நித்யானந்தா தரப்பில், 'மருத்துவ பரிசோதனை செய்வதை தள்ளி வைக்க வேண்டும்' எனக்கோரி, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி ஜெகநாதன், நித்யானந்தா தாக்கல் செய்த மனு மீது ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என, சி.ஐ.டி., போலீசாருக்கு உத்தரவிட்டார். சி.ஐ.டி., தரப்பில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் கேட்டனர்.
இதையடுத்து, வரும் 22-ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்து, அது வரை நித்யானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக