உலக அளவில், பிரபலமான மாநகரம் சென்னை. அதில், எங்கு நோக்கிலும் சுகாதாரப் பிரச்னை. நடைபாதைகள் கூட, மக்கள் பாதுகாப்பாக நடந்து செல்லும் நிலையில் இல்லை.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டும் அல்ல, வெளிமா நிலங்களில் இருந்தும், தினமும், ஆயிரக்கணக்கான மக்கள், வேலை தேடியும், பணி நிமித்தமாகவும் சென்னைக்கு வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, கட்டமைப்பு வசதிகள் இல்லை.
ஒரு தெருவில், 40 வீடுகள் இருந்த நிலை மாறி, தற்போது, 400 வீடுகள் வந்து விட்டன. விதிமீறல் கட்டடங்களும் அதிகம். ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து விட்டன. காலத்திற்கேற்ப, சாலை விரிவாக்க திட்டங்கள் செயல்படுத்தப்படாததால், நெரிசல் நிறைந்த நகரமாகி விட்டது. மாநகரை இதற்கு முன் நிர்வகித்தவர்கள், அதன் வளர்ச்சியில் அக்கறை காட்டாததை தான், தற்போதைய சென்னை, நமக்கு காட்டுகிறது.
இந்த சிக்கல்கள் எல்லாம் தீர்ந்த ஒரு நகரம் வேண்டும். சுத்தமான, நெரிசல் இல்லாத, பசுமை நிறைந்த, புதிய மாற்றங்கள் நிறைந்த சென்னையைத்தான் மக்கள் விரும்புகின்றனர். முதல்வரும் அதையே விரும்புவதால், புதிய மாற்றங்களை கொண்டு வர உத்தரவிட்டுள்ளார்.
* குப்பை பிரச்னைக்கு, முதலில் தீர்வு காண வேண்டும். தெருவில் குப்பை இருக்கக் கூடாது. கிடங்குகளில், பிளாஸ்டிக், இரும்பு பொறுக்கி பிழைப்பு நடத்துவோர், குப்பையை கொளுத்தி விடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, குப்பைக் கிடங்குகளே இல்லாத நிலை வேண்டும். இதை கருத்தில் கொண்டே, குப்பை மாற்று திட்டத்தை செயல்படுத்த, உலகளாவிய ஒப்பந்தம் கோரி, பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டம், விரைவில் நடைமுறைக்கு வரும். அப்போது, வீட்டுக்கு வீடு குப்பை சேகரிக்கப்படும். சேகரமாகும் குப்பை, நேரடியாக தொழிற்சாலைக்கு சென்று விடும் என்பதால், குப்பை பிரச்னை அறவே தீரும்.
* வீடு கட்ட கடைக்கால் போடும்போதே, திட்ட வரைமுறைப்படி கட்டுமானப் பணிகள் துவங்குகிறதா, விதிமீறல் இருக்கிறதா என, ஆரம்ப நிலையிலேயே கண்காணிப்பது அவசியம். அவ்வாறு செய்தால், விதிமீறல் கட்டடங்களைத் தடுக்க முடியும்.
* அடுத்தது, போக்குவரத்து நெரிசல். இதற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புகளை அறவே அகற்ற வேண்டும். தேவைக்கேற்ப சாலை விரிவாக்கம் அவசியம். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், நடைபாதை வசதி, சைக்கிள் செல்ல தனி பாதை வேண்டும். நீண்ட காலம் உழைக்கும் தரமான சாலை வேண்டும்.
முதற்கட்டமாக, 60 முக்கிய சாலைகள், அனைத்து வசதிகளுடன் உலகத்தரத்திற்கு மாற்றவும், 1,084 சாலைகளை, கான்கிரீட் சாலைகளாக மாற்றவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. விரிவாக்கப் பகுதிகளில், ஒருங்கிணைந்த சாலை பணி நடந்து வருகிறது.
நீண்ட காலம் தாக்குப்பிடிக்க, பிளாஸ்டிக் கலந்து, சாலைகள் அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நடைபாதைகள், 'ஸ்கைவாக்' அளவில், நவீனமாக்கப்பட உள்ளன. பல இடங்களில், மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் புதிதாக கட்டப்பட உள்ளன. தேவையான மாநகர பஸ்கள் உள்ளன. மோனோ ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட, ரயில் சேவைகளும் வருவதால், போக்குவரத்து நெரிசல் குறையும்.
* அரசியல் கட்சிகள், பொதுக் கூட்டங்கள், விழாக்கள் என, சாலையை கண்டபடி தோண்டுவதையும், சாலையோரத்திலும், மைய தடுப்பிலும் தோரணங்கள், கொடிகள் கட்டுவதையும், அவை அறுந்து விழுந்து, போக்குவரத்துக்கு சவால் விடும் நிலையையும் மாற்ற வேண்டும். சுவர்களில் போஸ்டர் ஒட்டுவதால், அருவருப்பான நிலை வருகிறது. இதற்கு, விடிவு வேண்டும்.
இதை உணர்ந்து, மாநகராட்சி பல்வேறு, கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை கொண்டு வருகிறது. தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அமலுக்கு வரும். அப்போது, இந்த சிக்கல்கள் தீரும்.
* சென்னை மக்களுக்கு, மெரீனா தவிர, வேறு சரியான பொழுதுபோக்கு இடங்கள் இல்லை. அதற்கேற்ப, பூங்காக்கள் அமைப்பது அவசியம். விரிவாக்கப் பகுதியில், அனைத்து வசதிகளுடன் கூடிய, 100 பூங்காக்கள், 30 கோடி ரூபாயில் உருவாகின்றன. ஏற்கனவே உள்ள பூங்காக்களை மேம்படுத்த, 'மக்களோடு மாநகராட்சி' எனும் திட்டத்தில், தனியாரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திறந்தவெளி நிலங்களும், பூங்கா, விளையாட்டுத் திடல் என, சிறப்பு கவனம் செலுத்துவதால், சென்னை, பசுமை நகராக மாறும்.
* மழைநீர் கால்வாய் அரைகுறையாக நிற்பது உண்மை தான். மழைக்காலத்தில், பெரும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப் படாத நிலை வேண்டும். மழைநீர் கால்வாய் பணியை விரைவில் முடிப்பதோடு, கால்வாயோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் அவசியம். ஆக்கிரமிப்பு குடிசைகளை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. மற்ற பணிகளும் முடுக்கிவிடப் பட்டுள்ளன.
* பொது கழிப்பிடங்கள் நோய் பரப்பும் இடமாக இருக்கக் கூடாது. நவீன முறைக்கு மாற வேண்டும். அதற்காக, கட்டுதல், பராமரித்தல், ஒப்படைத்தல் முறையில், ஐந்தாயிரம் இடங்களில், நவீன கழிப்பிடங்கள் அமைக்கப்பட உள்ளன.
* பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே, மெட்ரோ குடிநீர் கிடைக்கிறது. அதில், 'குளோரின்' அளவு உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஆயிரம் இடங்களில், தரமான அடக்கவிலை உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன.
* சென்னை மாநகரை மேம்படுத்த, பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு தேவை. அதற்கேற்ப, மாதம் தோறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டி, பல்வேறு தீர்வுகளுக்கு முயற்சி மேற்கொள்ளப் படுகிறது.
* பாதுகாப்பு கருதி, வணிக வளாகங்கள், கடைகள் அனைத்திலும், கண்காணிப்பு கேமரா கட்டாயமாக்கப்படுகிறது.
* தெரு விளக்குகள் அனைத்தும் செயல்படும் நிலை வேண்டும். அவை அனைத்தும், மின் சிக்கன விளக்குகளாக மாற்றும் பணி துவங்கி உள்ளது.
* கூவம், தேம்ஸ் நதி போல் மாற வேண்டும். பக்கிங்காம் கால்வாயை, சீரமைக்க வேண்டும். இதில், முதல்வர் கவனம் செலுத்தி வருகிறார். நிச்சயம் மாற்றம் வரும்.
சென்னை மாநகரம், மக்கள் நிம்மதியாக வாழும் நிலையில் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதை, ஒரேயடியாக நான் மறுப்பதற்கில்லை. முதல்வர் ஆலோசனை, உத்தரவுப்படி, மாநகர மேம்பாட்டிற்காக பல்வேறு சிறப்புத் திட்டங்கள் துவங்கப்பட்டு உள்ளன. இதன் பயன், முழுமையாக கிடைக்க, ஓரிரண்டு ஆண்டுகள் ஆகும்.
நான் சென்னைவாசி என்பதோடு, மாநகர மேயராக இருப்பதால், மாநகர மேம்பாட்டில் எனக்கும் மிகுந்த அக்கறை உண்டு. குப்பை பிரச்னை. நெரிசல் பிரச்னை இல்லாத, சுத்தமான, மக்கள் விரும்பும் மாநகராக, சென்னை மாறும். மக்கள் வியக்கும் நிலை வரும்.
மேயர் சைதை துரைசாமி.
நன்றி : தினமலர்.
நல்ல கட்டுரை
பதிலளிநீக்குஆனா நடுக்குமன்னு தான் தெரியவில்லை
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)