பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது. அசாம் வன்முறை, விலைவாசி உயர்வு, வறட்சி நிலவரம் உட்பட பல பிரச்னைகளை சபையில் எழுப்பி, ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்க, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், அனல் பறக்கும் விவாதங்களுக்கு இந்தக் கூட்டத் தொடரில் பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
'அசாம் வன்முறை நாட்டின் கவுரவத்திற்கு ஏற்பட்ட களங்கம்' என, பிரதமர் மன்மோகன்சிங் ஏற்கனவே விமர்சித்துள்ளதால், அந்தப் பிரச்னையை முதல் நாளான இன்றே எழுப்ப, எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது. இதுதவிர, ஸ்பெக்ட்ரம் விவகாரம் மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு மோசடி, சர்ச்சைக்குரிய ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து, புனே குண்டு வெடிப்பு, சமீபத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மின் தொகுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, வட மாநிலங்கள் இருளில் மூழ்கியது உட்பட வேறு பல பிரச்னைகளையும் எழுப்ப, எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்து உள்ளன.
தண்ணீர் கொள்கை : நாட்டின் பல பகுதிகளில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியாகப் பெய்யவில்லை. அதனால், வறட்சி நிலவரங்களை எதிர்கொள்ள மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், 'தேசிய தண்ணீர் கொள்கையை' அமல்படுத்துவது, வறட்சி மாவட்டங்களில், விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்குவது தொடர்பான விஷயங்களையும் பேச, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
அன்னிய முதலீடு : 'சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீடு தொடர்பாக, அனைத்துக் கட்சிகளிடமும் ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்ட பின், இறுதி முடிவெடுக்கப்படும்' என, அரசு முன்பு தெரிவித்தது. ஆனால், தற்போது அதற்கு மாறாக, சில நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதால், இந்த விவகாரத்தை கையில் எடுக்க, ஆளும் கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தீவிரமாக உள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக, அரசிடம் விளக்க அறிக்கை கோரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், எந்தப் பிரச்னை தொடர்பாகவும் விவாதிக்க தயாராக இருப்பதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் இதுபற்றி கூறுகையில், 'கடந்த கூட்டத் தொடரைப் போல அல்லாமல், இந்தக் கூட்டத் தொடர் நல்ல முறையிலும், சுமுகமாகவும் நடக்கும். அரசு அலுவல்கள் ஆக்கப்பூர்வமான வகையில் நடைபெறும் என நம்புகிறேன்,' என்றார்.
சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சுஷில்குமார் ஷிண்டே, லோக்சபா சபை முன்னவராக நியமிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு இந்தக் கூட்டத் தொடர், ஒரு பரிசோதனைக் களமாகவே இருக்கும்.
முடிவது எப்போது? : இன்று துவங்கும் பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர், செப்., 7-ம் தேதி முடிவடைகிறது. இந்தக் கூட்டத் தொடரில், 31 மசோதாக்களை நிறைவேற்ற அரசு தரப்பு திட்டமிட்டுள்ளது. இருந்தாலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லோக்பால் மசோதா, இந்த 31 மசோதாக்கள் பட்டியலில் இல்லை.
ராஜ்யசபாவின் தேர்வு கமிட்டி பரிசீலனையில் உள்ள அந்த மசோதா, கமிட்டி அறிக்கை தாக்கல் செய்த பின், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி வாரத்தில், முதல் நாளில், தேர்வு கமிட்டி தன் அறிக்கையை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக