சனி, 18 ஆகஸ்ட், 2012

தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு உடன்பாடு இல்லை.


     விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் குறித்து ஈரோடு மாவட்டக் கழகச் செயலாளர் என்.கே.கே.பி.ராஜா பேசிய பேச்சு திமுகவுக்கு உடன்பாடில்லை என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

     என்.கே.கே.பி ராஜா பேசிய அந்த சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து ஜூனியர் விகடனில் வெளியாகி இருந்த கட்டுரையில், "உலக அளவில் டெசோ மாநாடு இன்று பேசப்படுகிறது.இதை நடத்த கலைஞருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சிலர் கேட்கிறார்கள். கலைஞரின் அனுபவ வயது கூட அவர்களுக்கு இருக்காது. ஈழத் தமிழருக்காக எம்.எல்.ஏ. பதவியை இராஜினாமா செய்தவர் கலைஞர். பாலசிங்கம், சந்திரஹாசன் போன்றவர்களை நாடு கடத்திய போது அதனைத் தடுத்தவர் கலைஞர்.

     ஆனால், ராஜீவ் காந்தியைக் கொடூரமாகக் கொன்றார்கள் விடுதலைப் புலிகள். இளம் தலைவர் ராஜீவ் காந்தியை நாம் இழந்தோம். பல குழுக்களாக இருந்த போராளி அமைப்புகளை ஒன்றாக இருக்கச் சொன்னார் கலைஞர். ஆனால், பிரபாகரன் அதைக் கேட்கவில்லை.


     ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது ஆட்சியை மட்டும் நாம் இழக்கவில்லை. எத்தனையோ தி.மு.க-வினர் வீடு எரிக்கப்பட்டது. ஈழத்துக்காகப் போராடிய மற்ற அமைப்புகளின் தலைவர்களை பிரபாகரன் கொன்றார். ஈழத்தை, தான் மட்டும் ஆள வேண்டும் என்ற சுயநலம் பிரபாகரனுக்கு.

     தமிழகத்துக்குச் சிகிச்சைக்காக வந்த பார்வதியம்மாளைத் திருப்பி அனுப்பினோம் என்கின்றனர். அவர் வருவதை கலைஞரிடம் ஒரு வார்த்தை முன்கூட்டியே கூறி இருந்தால், அவரே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருப்பார்.

     மாநில அரசு ஒரு வரைமுறைக்கு உட்பட்டுத்தான் செயல்பட முடியும். விடுதலைப் புலிகளை அழைத்து வந்து நாங்கள் போர்ப் பயிற்சி கொடுத்தோம். ஒரு அ.தி.மு.க-காரன் செய்ததாகச் சொல்ல முடியுமா?


     பழ.நெடுமாறன் எதற்கெடுத்தாலும் ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டு ஈழத்துக்குப் போவேன் என்று கூறுவார். ஆனால் போக மாட்டார். தைரியம் இருந்தால் ஈழத்துக்குப் போய் பிரபாகரனோடு சேர்ந்து போராட வேண்டியதுதானே?


     வைகோ, திருட்டு தோணி ஏறிப் போனார். ராஜபக்சவைவிட அதிக தமிழர்களைக் கொன்றவர் பிரபாகரன். ராஜபக்ச, பிரபாகரனைக் கொன்றது கரெக்ட் என்று முடித்தார் என்.கே.கே.பி ராஜா” என கூறப்பட்டிருந்தது. இக்கட்டுரை வெளியானதும் சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து, திமுக இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.



     அதில் "ஈரோடு மாவட்டக் கழகச் செயலாளர் என்.கே.கே.பி.ராஜாவும் - தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் வி.பி.ராஜனும், ஈரோடு நகரத்தில் நடைபெற்ற கழகப் பொதுக்கூட்டத்தில், இலங்கைப் பிரச்சினை தொடர்பாகப் பேசியதாக, ஜூனியர் விகடனில் வெளியான கருத்துக்களுக்கு தி.மு.க.தலைமைக் கழகத்திற்கு உடன்பாடு இல்லை. இது பற்றி அவர்கள் இருவரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக