புதிய தலைமைச் செயலகத்தின் கதவுகளை இழுத்துப் பூட்டி முழுதாக ஒரு வருடம் உருண்டோடி விட்டது. தமிழக முதல்வராக இருந்தவரை அங்கு தினம் விசிட் அடித்து, பார்த்துப் பார்த்து கருணாநிதி செதுக்கிய கட்டடம் இப்போது பாழடைந்து கிடக்கிறது.
விசாரணை கமிஷன் வலையில் சிக்கியிருக்கும் புதிய தலைமைச் செயலகம் இப்போது கிட்டத் தட்ட ராணுவக்கேந்திரம் போல் ஆகிவிட்டது. யாருமே உள்ளே நுழைய முடியாதபடி வாசல்களில் காக்கிச் சட்டைகளின் கண்காணிப்பு இருக்கிறது.
ஆனால், இப்போதைய பகீர் தகவல்... அந்தக் கட்டடத்துக்குள்ளே பாம்புகள் பல்கிப் பெருகிக் குடித்தனம் நடத்துகின்றன என்பதுதான். வேறு வேலையாக இப்போதைய தலைமைச் செயலகத்துக்கு (செயின்ட் ஜார்ஜ் கோட்டை) சென்று இருந்தபோது, ''அந்த இடத்தை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையா மாத்துறதுக்குப் பதிலா கிண்டி பாம்புப் பண்ணையை அங்கே மாத்திடலாம். எப்பா... எம்புட்டு பாம்புக கெடந்து நெளியுதுக. உள்ளே போயிட்டு வரவே பயமா இருக்கு'' என்று திகில் கிளப்பினார்கள் தலைமைச் செயலக ஊழியர்கள்.
அவசர அவசரமாக இடம் மாற்றியதால், இன்னும் அங்கு பல பொருட்கள் மாட்டிக்கொண்டு இருக்கின்றனவாம். அவற்றை எடுக்க அங்கு சென்ற ஊழியர்களைத்தான் அந்தப் பாம்புகள் விரட்டி அடித்திருக்கின்றன. மனிதக் கால்தடங்கள் பதியாமல் போனதால் குடியேறிய நாகங்கள், சட்டசபையின் உள்பகுதி, வராண்டா, முக்கியப் பிரமுகர்கள் தங்கும் அறைகள் என நீக்கமற எங்கெங்கும் நிறைந்து படம் எடுத்து ஆடுகின்றனவாம்.
புதிய தலைமைச் செயலக வளாகம் முழுக்க கான்க்ரீட் தரைகளில் ஆங்காங்கே எருக்கஞ்செடிகள் முளைத்திருக்கின்றன. அந்த வளாகத்தில் நாட்டின் மிக முக்கியப் பிரமுகரால் நடப்பட்ட மரக்கன்று ஒன்று மரித்துப்போயிருக்கிறது.
அந்தப் பிரமுகர்... பிரதமர் மன்மோகன்சிங். புதிய சட்டசபைத் திறப்பு விழா அன்று அந்த வளாகத்தில் மன்மோகன்சிங் நட்ட மரக்கன்றுதான் கருகிவிட்டது. அந்த மரக்கன்றுக்கு முதல் நபராகத் தண்ணீர் பாய்ச்சியவர் சோனியா காந்தி.
பிரதமர் நட்ட மரக்கன்றுக்கே இந்தக்கதி என்றால், கருணாநிதி ஆசை ஆசையாக வளர்த்த மீன்கள் மட்டும் உயிருடனா இருக்கும்? புதிய தலைமைச் செயலக வளாக முகப்புக்கு அருகே நீரூற்றுடன் கூடிய பெரிய வட்ட வடிவ நீர்த்தொட்டி அமைத்திருந்தார்கள். அதில் நூற்றுக்கணக்கான வண்ண மீன்களை விட்டிருந்தார்கள்.
புதிய தலைமைச் செயலகம் செயல்படத் துவங்கிய சமயம், அரசியல்-குடும்ப நிர்பந்தம் காரணமாக மனம் சஞ்சலம் அடையும்போது கிளம்பி வந்து, அந்த மீன்களுக்குப் பாசத்தோடு பொரி போடுவார் கருணாநிதி. சமயங்களில் அந்தி சாய்ந்த பிறகும் அந்தத் தொட்டியின் அருகில் நீண்ட நேரம் சிந்தனையில் ஆழ்ந்து அமர்ந்திருப்பார். பேராசிரியர் அன்பழகனோடு நீண்ட உரையாடல்களை நடத்துவார். ஆனால், அன்று கருணாநிதி கையால் பொரி வாங்கிய மீன்கள் இன்று காய்ந்து கருவாடாகி காணாமல் போய்விட்டன.
சரி... புதிய தலைமைச் செயலகம் இனி என்ன தான் ஆகும்?
''எதுவும் ஆகாது. அப்படியே இருக்கும்'' எனக் கண் சிமிட்டும் கோட்டை வட்டாரம், அதன் பின்னணித் தகவல்களையும் பகிர்ந்துகொண்டது. ''புதிய தலைமைச் செயலகக் கட்டுமானத்தில் ஈடுபட்டது கருணாநிதிக்கு நெருக்கமான சலாவுதீனின் இ. டி. ஏ. குழுமம். இதே இ. டி. ஏ-தான் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் ஒப்பந்தமும் போட்டிருந்தது.
கோட்டூர்புரம் அண்ணா நூலகமும் இ. டி. ஏ-வின் கைவண்ணம்தான். கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வைத்தது, சலாவுதீனுடன் கருணாநிதிக்கு இருந்த நெருக்கம்தான்.
அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த கடந்த ஆட்சிக் காலத்தில், 2010 கோவை பொதுக்கூட்டத்தில் இ. டி. ஏ. நிறுவனத்துக்கு எதிராக ஆவேசமாக முழங்கினார் ஜெயலலிதா. இ. டி. ஏ. குரூப் மிகப் பெரிய சர்வதேச நிறுவனம். துபாய்தான் இதற்குத் தலைமையிடம் என்றாலும் இதனை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்தக் குழுமம்தான், புதிய தலைமைச் செயலக வளாகத்தைக் கட்டியது. 1970-களில் இருந்து கருணாநிதியுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது இ. டி. ஏ. இந்தக் குழுமத்தைச் சேர்ந்த 'கிரசென்ட் ஃபிலிம்ஸ்’ என்ற திரைப்பட விநியோக நிறுவனம்தான், எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத் தனது மகன் மு.க.முத்துவை வைத்து, கருணாநிதியால் தயாரிக்கப்பட்ட 'பிள்ளையோ பிள்ளை’ என்ற திரைப்படத்தை வெளியிட்டது’ என்று அப்போது கர்ஜித்தார் ஜெயலலிதா.
அந்த வேகத்தோடுதான், ஜெயலலிதா முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்றதும் இ. டி. ஏ-வுக்கு எதிரான நடவடிக்கைகள் பரபரத்தன. ஆனால், இப்போது எல்லாம் அடங்கிவிட்டன. என்ன காரணம்? தெரியவில்லை.
இப்போது ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகும் சிம்ரன் நடத்தும் 'ஜாக்பாட்’ நிகழ்ச்சியின் ஸ்பான்சர்களில் முக்கியமான நிறுவனம் இ. டி. ஏ குழுமம்!
courtesy : ஜூனியர் விகடன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக