புதன், 15 ஆகஸ்ட், 2012

லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு விழா.


     இங்கிலாந்து நாட்டில் கடந்த 15 நாட்களாக நடைபெற்ற 30-வது லண்டன் ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக நிறைவு பெற்றது. ஒலிம்பிக் போட்டியின் இறுதியில் அமெரிக்கா 46 தங்கம்  பெற்று  முதலிடத்தைக் கைப்பற்றியது. சீனா 29 தங்கத்துடன் 2-வது இடத்தையும்,  இங்கிலாந்து 29 தங்கத்துடன் 3-வது இடத்தையும் பிடித்தன.

     30-வது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் லண்டன் நகரில் கடந்த 27-ம் தேதி துவங்கியது. இதில்  204 நாடுகளைச் சேர்ந்த  10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தப் போட்டியின் துவக்கத்தில் இருந்தே சீனா பதக்கப் பட்டியலில் முன்னணியில் இருந்தது. ஆனால் அமெரிக்கா கடந்த சில நாட்களாக தங்கப் பதக்கங்களைக் குவித்தது. 

     இதனால் பதக்கப் பட்டியலில் அந்த அணியே முதலிடம் பிடித்தது. கடைசி நாள் போட்டியில் 15 தங்கம் வழங்கப் பட்டது. இதில் சீனாவுக்கு 1 தங்கம் கூட கிடைக்கவில்லை. ரஷ்யாவுக்கு 3 தங்கமும், அமெரிக்காவுக்கு 2 தங்கமும் கிடைத்தன. 



     அமெரிக்கா 46 தங்கம், 29 வெள்ளி மற்றும்  29 வெண்கலம் ஆகியவற்றுடன் மொத்தம் 104 பதக்கம் பெற்று பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. கடந்த ஒலிம்பிக்கில் முதல் இடத்தைப் பிடித்த சீனா 38 தங்கம், 28 வெள்ளி மற்றும் 22 வெண்கலம் ஆக  மொத்தம் 87 பதக்கம் பெற்று 2-வது இடத்தைப் பிடித்தது. 

     போட்டியை நடத்திய இங்கிலாந்து இந்த ஒலிம்பிக்கில் மிகவும் சிறப்பாக செயல்பட்டது. அந்த அணி 29 தங்கம் 19 வெள்ளி மற்றும் 15 வெண்கலம் ஆக மொத்தம் 65 பதக்கம் பெற்று 3-வது இடத்தைப் பிடித்தது. ரஷ்யா 24 தங்கம் உள்பட 82 பதக்கம் பெற்று 4-வது இடத்தையும், தென்கொரியா 13 தங்கம் உள்பட 28 பதக்கம் பெற்று 5-வது இடத்தையும் பிடித்தன.

     இந்தியா 2 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கம் பெற்று 55-வது இடத்தைப் பிடித்தது. 85 நாடுகளே பதக்கப் பட்டியலில் இடம் பிடித்தன. 119 நாடுகள் எந்தவித பதக்கமும் பெறவில்லை. பதக்கப் பட்டியலில் 85 நாடுகள் இருந்தபோதிலும், 54 அணிகளே தங்கப்பதக்கம் பெற்று இருந்தன.


     லண்டன் ஒலிம்பிக்கில் அனைவரையும் கவர்ந்தவர் உசேன் போல்ட். அதிவேக ஓட்டப் பந்தய வீரரான அவர்  பெய்ஜிங் ஒலிம்பிக் போலவே லண்டன் ஒலிம்பிக்கிலும் சிறப்பாக செயல்பட்டார். 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் போல்ட் அசைக்க முடியாத வீரராக திகழ்கிறார். இதேபோல அமெரிக்க வீரரான பெல்ப்ஸ் ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் வென்ற வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். 


     லண்டன் ஒலிம்பிக் போட்டி நேற்று முன்தினம் கோலாகலமாக நிறைவு பெற்றது. இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணி முதல் 4.30 மணி வரை 3 மணி நேரம் நிறைவுவிழா நடந்தது. நிறைவு விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஐபிக் பெல் மற்றும்  லண்டன் பாலம் ஆகியவற்றின் மாதிரிகள் காண்பிக்கப்பட்டன. 






     வின்ஸ்டன் சர்ச்சில் போல வேடமணிந்த ஒருவர் கலை நிகழ்ச்சிகளை நடத்தியது பார்வையாளர்களை கவர்ந்தது. பாடகர்கள் ரேடேவிஸ், எமலி ஆகியோர் பாடல்களை பாடி மகிழ்ந்தனர். நிறைவு விழாவின்போது ஒவ்வொரு நாடுகளின் வீரர் வீராங்கனைகளும் கொடியை ஏந்திச் சென்றனர். வெண்கலப் பதக்கம் வென்ற  இந்திய வீராங்கனை மேரிகோம் இந்திய கொடியை ஏந்திச் சென்றார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக