வடக்கு கிழக்கிலே சரியான தலைமைத்துவம் இருந்ததன் காரணமாகவே எமது மொழியையும் இனத்தையும் காப்பாற்றியவர்களாக இருக்கின்றோம். ஆனால் நாட்டின் ஏனைய பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்களே இல்லாமல் போயுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைமை வேட்பாளர் கி. துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்திலுள்ள கதிரவெளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அபிவிருத்தி என்பது நூற்றுக்கு நூறு வீதம் மனித விழுமியங்களில் செய்யப்படுகின்ற அபிவிருத்தியாக இருக்க வேண்டும். பத்து வீதம் இருக்கின்ற பௌதீக வள அபிவிருத்தி அபிவிருத்தியாகிவிட முடியாது.
மனித உரிமைகள் பேணப்பட வேண்டும். அடிப்படை உரிமைகள் பேணப்பட வேண்டும். கருத்துச் சுதந்திரம் பேணப்பட வேண்டும். ஒன்று கூடுகின்ற சுதந்திரம் இருக்க வேண்டும். மனித விழுமியங்கள் காப்பாற்றப்பட வேண்டும்.
மத சுதந்திரம் இருக்க வேண்டும். மக்கள் தங்களைத் தாங்களே ஆளுகின்ற சுதந்திரத்தை பெற்றுத்தர வேண்டும் இதுதான் முழுமையான அபிவிருத்தியாகும். இதைவிட்டு இங்கு செய்யப்படும் பௌதீக அபிவிருத்தி மட்டும் ஒரு நாட்டின் அபிவிருத்தியாக அமையாது.
பாராளுமன்றத்திலே எம்முடைய பிரதிநிதித்துவம் மிகவும் குறைவானது. இதனால் பெறுகின்ற அபிவிருத்தி மக்களுக்கு போதாது. அதனால் தான் எம்முடைய பிரதேசத்திற்கு அதிகாரம் வேண்டும் என்று நாங்கள் 1956-ஆம் ஆண்டு தொடக்கம் பிரதேச அபிவிருத்தி நோக்கிய சுயாட்சி என்று கூறப்படும் “சமஷ்டி முறையை” நாம் கேட்டு பல்வேறு நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டோம்.
அதன் பயனாக இந்தியாவின் தலையீடு காரணமாக பெறப்பட்ட தீர்வுதான் இந்த மாகாண சபை. மாகாண சபையில் நாம் கேட்பது அதிகாரமற்றிருக்கின்ற வடக்கு கிழக்கு மக்களுக்கு அவர்கள் தங்களுடைய பிரதேசத்தை தாங்களே ஆளக்கூடிய விதத்திலேயான அமைப்பாக கேட்டதை வடக்கு கிழக்கு மாகாணசபை தவிர்த்த எல்லா மாகாணங்களுக்கும் கொடுத்திருக்கிறார்கள். இது “பசியோடு இருப்பவர்களுக்கு சோற்றைக் கொடுத்துவிட்டு சோற்றிலே மண்ணைப் போடுவது” போல் உள்ளது.
இலங்கையில் பல பாகங்களிலும் தமிழர்கள் வாழ்வதற்கான அடையாளங்களே இல்லாமல் போய்விட்டது. கதிர்காமத்திலே “ஓம் முருகா” என்ற எழுத்து கூட இல்லாமல் போய்விட்டது. இங்கு முருகன் மட்டும் இருக்கின்றார். அந்தப் பிரதேசத்திலே வாழ்ந்த தமிழ் மக்கள் அங்கில்லை.
சிலாபத்திலே முன்னேஸ்வரம் ஆலயம் உள்ளது. அங்கிருந்த மக்கள் அடையாளமற்றவர்களாக இருக்கிறார்கள். நீர்கொழும்பிலே சில வருடங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட பெனார்டோபுள்ளே அமைச்சர், அவரது தாய்க்கு சிங்களம் தெரியாது. அவருக்கு தமிழ் அரைகுறையாக தெரியும். அவரது பிள்ளைக்கு தமிழே தெரியாது. இவ்வாறு நம்முடைய இனம் அழிந்துகொண்டிருக்கிற வரலாறு கண்முன்னே உண்டு.
எமது நாடு அரசியல் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்த குறிப்பிட்ட காலத்தில், ஏதாவது ஒரு அரசியல் கட்சியை, ஏதாவது அரசியல் கொள்கையைப் பின்பற்றாதவர்கள், இந்த நாட்டிலே இருப்பாரானால் அவர் “ஒன்றும் தெரியாத முட்டாளாகத்தான்” இருக்க வேண்டும்.
எமது மக்கள் இம்முறை தேர்தலை சரியாக சிந்தித்துப் பயன்படுத்த வேண்டும் அப்போதுதான் மாகாண ஆட்சியை அமைக்கின்ற பலம் எமக்கு கிடைக்கும், என தெரிவித்தார்.
Courtesy : www.puradsi.com
நல்ல பயனுல்ள்ள தகவல்கள்
பதிலளிநீக்குநன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
நன்றி!
நீக்கு