அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வமிக்க மாணவர்களுக்கு மாதம் ரூ. 4 ஆயிரத்திலிருந்து 7 ஆயிரம் வரை கல்வி உதவித் தொகை வழங்குகிறது மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை. பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்பிலிருந்து பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் வரை இந்த உதவித் தொகை பெறலாம். திறனறித் தேர்வின் அடிப்படையில் இந்த உதவித் தொகை பெற மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அறிவியல் படிப்புகளில் ஆராய்ச்சியில் ஆர்வமிக்க மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை கிஷோர் வைகியானிக் புரோஸ்தன் யோஜனா (கேவிபிஒய்) என்ற கல்வி உதவித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் (ஐஐஎஸ்சி) இந்த உதவித் தொகைத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
இந்த உதவித் தொகை பெற என்ன கல்வித் தகுதி தேவை?
எஸ்.ஏ.(SA) பிரிவின் கீழ் உதவித் தொகை பெற விரும்புபவர்கள், தற்போது பிளஸ் ஒன் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படிப்பவராக இருக்க வேண்டும். அத்துடன் இந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பில் கணிதம், அறிவியல் பாடங்களில் 80 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் பாடங்களில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். எஸ்.ஏ. மென்டரிங் திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற விரும்புபவர்களுக்கும் இதே தகுதிதான் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதற்காக தனியே விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
எஸ்.எக்ஸ். (SX) பிரிவின்கீழ் உதவித் தொகை பெற விரும்புபவர்கள், பிளஸ் டூ வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படிக்க வேண்டும். பிளஸ் டூ படித்து முடித்த பிறகு, அடிப்படை அறிவியல் பி.எஸ்சி., பி.எஸ். போன்ற இளநிலை அறிவியல் பட்டப் படிப்புகளிலோ அல்லது ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., எம்.எஸ். படிப்பிலோ சேர ஆர்வத்துடன் இருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்புத் தேர்வில் கணிதம், அறிவியல் பாடங்களில் குறைந்தது 80 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இந்தத் தகுதியுள்ள பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
எஸ்.பி. (SB) பிரிவின்கீழ் உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் இந்த ஆண்டு பி.எஸ்சி., பி.எஸ்., ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., எம்.எஸ். போன்ற அடிப்படை அறிவியல் பட்டப் படிப்புகளில் முதல் ஆண்டில் படித்து வர வேண்டும். இந்த உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ வகுப்பில் அறிவியல் பாடங்களில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்கள் அறிவியல் பாடங்களில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
மாணவர்கள் எப்படித் தேர்வு செய்யப்படுகிறார்கள்?
SA, SX, SB பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வருகிற நவம்பர் 4-ம்தேதி நாட்டின் பல்வேறு நகரங்களில் திறனறித்தேர்வு நடத்தப்படும். அதன் அடிப்படையில் மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
தகுதியின் அடிப்படையில், இந்தக் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர்களின் அனலிட்டிக்கல் திறமையைச் சோதனை செய்யும் வகையில் இத்தேர்வு இருக்கும். பிளஸ் டூ பாட நிலையிலேயே கேள்விகள் இருக்கும்.
உதவித் தொகை எவ்வளவு?
பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும். அத்துடன் இதர படிப்புச் செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.16 ஆயிரம் வழங்கப்படும்.
பி.எஸ்சி., பி.எஸ்., ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்பில் முதல் மூன்று ஆண்டுகள் வரை உள்ள மாணவர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும். அத்துடன் இதரப் படிப்பு செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
தகுதி பெறும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் 100 பேருக்கு கூடுதலாக இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவித் தொகை பெறும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று படிப்பில் சிறந்து விளங்க வேண்டும். கோடை காலப் பயிற்சியும் மாணவர்களின் திறமையும் கணக்கில் கொள்ளப்படும். அதன் அடிப்படையில்தான் இந்த உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த உதவித் தொகை பெற விரும்புபவர்கள் புராசசிங் கட்டணமாக ரூ. 200 செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாணவிகளுக்கு இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பங்களை கேவிபிஒய் இணைய தளத்திலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். தபால் மூலம் விண்ணப்பங்களைப் பெற விரும்புபவர்கள் செப்டம்பர் 3-ம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். செப்டம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பங்களை நேரில் பெறலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலமோ அல்லது ஆன்லைன் மூலமோ விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 12-ம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். இந்த உதவித் தொகைத் திட்டம் குறித்த விரிவான தகவல்களை, கேவிபிஒய் இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
The Convener
Kishore Vaigyanik Protsahan Yojana (KVPY)
Indian Institute of Science
Bangalore 560 012.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக