வியாழன், 30 ஆகஸ்ட், 2012

BACKDOOR SANTA என்பது என்ன?


#     சி. டி. ட்ரைவின் டோர் அடிக்கடி சிக்கிக் கொண்டு திறக்க மறுக்கிறது. பட்டனை பலமுறை அழுத்திய பின் திறக்கிறது. சில வேளைகளில் அதற்கும் திறக்க மறுக்கிறது. இதற்கான தீர்வு என்ன?

*     ட்ரைவ் திறப்பதில் சிக்கல் இருக்கலாம். நல்ல டெக்னீசியன் ஒருவரிடம் ட்ரைவினைக் கழட்டிப் பார்க்கச் சொல்லவும். அதற்கு முன் ட்ரைவ் கதவினைத் திறக்க  வேறு சில வழிகள்  உள்ளன. டெஸ்க்டாப்பில் உள்ள மை கம்ப்யூட்டர் ஐகானில் டபுள் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் விண்டோவில், சி.டி. ட்ரைவிற்கான ஐகானில், ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் Eject என்பதில் கிளிக் செய்திடவும்.

     இன்னொரு முறையும் உள்ளது. இதனைப் பலரும் பின்பற்றி இருக்க மாட்டார்கள். மை கம்ப்யூட்டர் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். பிரிவில் Manage என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இது  Computer Management என்ற விண்டோவினைக் காட்டும். விஸ்டாவிலும், விண்டோஸ் 7-லும், Disk Management என்ற பிரிவு Storage section என்பதன் கீழ் கிடைக்கும். விண்டோஸ் எக்ஸ்பியில் இது தனியாகவே கிடைக்கும். இதில் சி.டி. ராம் ட்ரைவ் பிரிவில், ரைட் கிளிக் செய்து, கிடைப்பதில் Eject என்பதில் கிளிக் செய்யவேண்டும். இல்லையேல், பேப்பர் கிளிப் ஒன்றை, விரித்து, மெதுவாக சி. டி. ராம் ட்ரைவ் முன்புறம் காணப்படும் சிறிய துளையில் செலுத்தவும். அது மோதி நிற்கும் இடத்தில், சற்று அழுத்தினால், கதவு திறக்கும்.


#     கம்ப்யூட்டர்  வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராமினால் பாதிக்கப்பட்டது  என உறுதியாகத் தெரிய வந்தால், என்ன செய்வது?

*     உறுதியாக வைரஸ் அல்லது மால்வேர் என அறிந்தால், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் சரியாகச் செயல்படவில்லை அல்லது நீங்கள்  அப்டேட் செய்திடவில்லை  என்பது உறுதியாகிறது. எனவே, கம்ப்யூட்டரை சிடி ட்ரைவ் மூலம் பூட் செய்திடவும். அதன் பின் நல்ல, அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் கொண்ட சிடியின் மூலம், ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இயக்கி, வைரஸ் புரோகிராமினைக் நீக்கவும். இது இயலாத பட்சத்தில், விண்டோஸ் சிஸ்டத்தினை மீண்டும் அமைப்பதுதான் ஒரே வழி.

#     கிகா பைட், டெரா பைட் என டேட்டா கொள்ளளவில் உயர் நிலையைக் காட்டுகிறோம். அடிப்படையில் குறைந்த அளவு எது?

*     கொள்ளளவு என்றில்லாமல், கம்ப்யூட்டர் டேட்டா குறித்த குறைந்த அளவு ஒரு பிட் எனலாம். இதனையே  1 அல்லது 0 என நாம் எழுதுகிறோம். நான்கு பிட் சேர்ந்தால், அதற்குப் பெயர் Nybble. 8 பிட் சேர்ந்தால், அதன் பெயர் பைட் (Byte BinarY digiT Eight) இப்படி பார்த்தால், நிப்பிள் என்பது அரை பைட். அதிக அளவு டெரா பைட்தானா? இப்போதைக்கு அதிக அளவு யோட்டா பைட் (Yottabyte). இதனை எப்படி கணக்கிடலாம். 10x10 என 24 முறை போட்டுக் கணக்கிடுங்கள். அதாவது Yottabyte என்பது 10 டு த பவர் ஆப் 24.


#     BACKDOOR SANTA என்பது என்ன? இது  எம்.எஸ். ஆபீஸ் போல ஒரு புரோகிராமா? தொகுப்பா?

*     அவ்வப்போது இணையத்தில் கிடைக்கும் புரோகிராமின் பயன்களை விரும்பி, அதனை  டவுண்லோட் செய்து பயன்படுத்துகிறோம். அப்போது அதே புரோகிராம், நமக்கு அறிவிக்காமலேயே சில செயல்களை கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும். இவை நம் கம்ப்யூட்டர் பயன்பாடு, நாம் செல்லும் இணைய தளங்கள், நாம் இணையத்தில் வாங்கும் பொருட்கள் போன்ற தகவல்களைத் திரட்டும். நாம் பயன்படுத்தும் புரோகிராம் இந்த வேலையை மேற்கொள்கிறது என்பது நமக்குத் தெரியாது. Alexa மற்றும் Hotbar போன்றவை இத்தகைய புரோகிராம்களே. உங்களுடைய பிரவுசரின் டூல்பாரில், நீங்கள் எதிர்பார்க்காமல், இந்த டூல்பார்களில் ஒன்றைப் பார்க்க நேர்ந்தால், பேக் டோர் சாண்டா உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளதாகப் பொருள். உடனே Add/Remove Programs சென்று அதனை நீக்கவும்.


#     இணைய தளத்தில் உள்ள தகவல்களைப் பிரிண்ட் எடுக்கையில், அதில் உள்ள இமேஜஸ் மற்றும் பேக் கிரவுன்ட் கலர் சேர்ந்து தேவையற்ற வகையில் பிரிண்ட் ஆகிறது. இவை இல்லாமல் எப்படி பிரிண்ட் எடுப்பது?

*     டெக்ஸ்ட் மட்டும் தனியே இணைய தளத்திலிருந்து எப்படி பிரிண்ட் எடுப்பது?பொதுவாக சில வெப்சைட்டுகளிலேயே இந்த ஆப்ஷன் தரப்பட்டிருக்கும். டெக்ஸ்ட் மட்டும் பிரிண்ட் செய்திட வழி இருக்கும். அவ்வாறு இல்லையேல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் இதனை மேற்கொள்ளலாம். டூல்ஸ் அழுத்தி பின் இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் செல்லவும். இங்கு அட்வான்ஸ்டு டேப் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதன் கீழாக பிரிண்டிங் என்ற பிரிவு இருக்கும். இங்கு 'Print background colors and images' என இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்காமல் (டிக் அடையாளம் எடுத்துவிட்டால்) விட்டுவிட்டால் நீங்கள் கேட்டபடி பிரிண்ட் செய்திடலாம்.


#      எக்ஸெல் ஒர்க் புக் தயாரிக்கையில், ஒர்க்ஷீட்டில் என்டர் அழுத்தினால், அது கீழேயுள்ள செல்லுக்குச் செல்லாமல், மேலே உள்ள செல்லுக்குச் செல்கிறது. இதனை எப்படி மாற்றலாம்?

*     இது எம். எஸ். எக்ஸெல் புரோகிராமின் மாறா நிலையில் அமைக்கப்பட்டுள்ள அமைப்பு. இதனை நீங்கள் விரும்பும் வகையில் மாற்றலாம். எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் என்டர் அழுத்துகையில் நீங்கள் விரும்பும் திசையில்  கர்சர் செல்லும்படி மாற்றும் வழியை செட் செய்திடலாம். Tools மெனு சென்று அதில் Options தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் இப்போது Options dialog box காட்டும்.

     இதில் Edit என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தவும். இங்கு Move Selection after Enter என்பதனைக் காணவும். அங்கு கிடைக்கும் ட்ராப் டவுண் (Drop Down) மெனுவினைப் பெற்று அதில் Down என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்திடவும்.



#     பிரிண்டர் அச்சடித்த பின்னர் நிறுத்த, மின் சக்தியை நிறுத்தலாமா?

*     எந்த டிஜிட்டல் சாதனமும், தன்னிடத்தே பவர் ஸ்விட்ச் ஒன்றை வைத்திருக்கும். சாதனத்தின் இயக்கத்தினை நிறுத்த, அதனுடன் அமைந்திருக்கும் ஸ்விட்சையே பயன்படுத்த வேண்டும். நேரடியாக மின் சக்தியைத் தரும் ஸ்விட்ச் ஐ ஆப் செய்வது தவறு. பிரிண்டரில் உள்ள ஆஃப் சுவிட்சை அழுத்தினால், உடனே பிரிண்ட் ஹெட்டை சுத்தம் செய்து அதை சரியான இடத்தில் நிலை நிறுத்துகிற வேலையை பல இங்க்ஜெட் பிரிண்டர்கள் செய்கின்றன. எனவே, பிரிண்டரில் உள்ள ஸ்விட்சை மட்டும் பயன்படுத்தி அதன் இயக்கத்தினை நிறுத்தவும்.



#     வேர்ட் டாகுமெண்ட்டில் திருத்தங்களை மேற்கொள்ளும்போது, ஒரு திருத்தத்திற்கேற்றார் போல, இன்னொரு இடத்திலும் திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனை ஒரே திரையில் இரண்டாகப் பிரித்து வைத்து செய்திட முடியுமா? நான் வேர்ட் 2003 பயன்படுத்தி வருகிறேன்.

*     டாகுமெண்ட் முழுமையும் தரப்பட்டுள்ள தகவல்கள் சீராக அமைய வேண்டுமானால், இது போல ஒன்றையொன்று சார்ந்து எடிட் செய்திடும் சூழ்நிலை ஏற்படும். இதற்காக ஒவ்வொரு முறையும் நாம் பக்கங்களிடையே அலைய முடியாது. இதற்கெனவே  வேர்ட் ஸ்பிளிட் எடிட்டிங் வசதி தருகிறது. ஒரே டாகுமெண்ட்டை ஒரே திரையில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் திறக்கும் வசதியைத் தந்துள்ளது.

     எந்த வேர்ட் டாகுமெண்ட்டில் இதுபோல இரண்டு இடங்களில் எடிட் செய்திட வேண்டுமோ அதனைத் திறந்து கொள்ளுங்கள். பின் 'Window' என்பதனைத் தேர்ந்தெடுத்து அதில் கிடைக்கும் பிரிவுகளில் 'Split' என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது படுக்கை வாட்டில் ஒரு கோடு கிடைக்கும். இந்த கோடு உங்கள் மவுஸ் கர்சருடன் சேர்ந்து மேலும் கீழும் செல்லும். இக்கோட்டினை உங்களுக்கு வசதியான இடத்தில் வைத்து கிளிக் செய்து நிலை நிறுத்தவும்.

     இப்போது டாகுமெண்ட் இரு பிரிவுகளில் முழுமையாக இருப்பதனைக் காணலாம். நீங்கள் ஒரே நேரத்தில் பணியாற்ற வேண்டிய இரு இடங்களை இந்த இரண்டு பிரிவுகளில் வைத்துக் கொண்டு திருத்தலாம். அப்படி திருத்துகையில் இந்த  இரு பிரிவுகளிலும் காணப்படும் டாகுமெண்ட்டில் திருத்தங்கள் ஏற்படுவதனைக் காணலாம். இப்படி ஒரு பிரிவைப் பார்த்துக் கொண்டே இன்னொரு பிரிவில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். பிரித்ததை மீண்டும் ஒட்டிப் பார்க்க மீண்டும் விண்டோ மெனு சென்று 'Remove Split' என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.

#      அவசரத் தேவைக்காக ஒரு போல்டரை மினிமைஸ் செய்து டாஸ்க் பாரில் வைத்து ஆப்பரேட் செய்கிறேன். இதில் பைல் ஒன்றைப் போட்டு வைக்க மீண்டும் திறக்க வேண்டியுள்ளது. வேறு சுருக்க வழி உள்ளதா?

*     மீண்டும் திறக்க வேண்டியதில்லை. போல்டர் உங்கள் பயன்பாட்டிற்காகத்தானே டாஸ்க் பாரில் தயாராக உள்ளது. பைலை அப்படியே இழுத்து வந்து அந்த போல்டரின் மீது மவுஸின் பட்டனிலிருந்து அழுத்தத்தை எடுக்காமல் வைத்திருக்கவும். போல்டர் தானாகத் திறந்திடும். இப்போது அந்த விண்டோவில் பைலைப் போட்டுவிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக