வியாழன், 9 ஆகஸ்ட், 2012

6.5 கோடி பேருக்கு இலவச செல்போன்.


     நாடு முழுவதும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு இலவசமாக செல்போன்களை வழங்குவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

     இது குறித்து திட்டக் குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவிடம் கேட்டதற்கு, 'இத்திட்டத்துக்கான வாய்ப்பு குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இதன் அடிப்படை நோக்கம் கிராமப்புறங்களிலும் செல்போன் சேவை கிடைக்கச் செய்வதுதான். 

     இத்திட்டம் எவ்வளவு தூரம் பயனளிக்கும் என்பதை மதிப்பிடுவதற்காக திட்டக்குழுவின் சில அதிகாரிகள், தொலைத் தொடர்புத் துறையுடன் விவாதித்து வருகின்றனர். இத்திட்டத்துக்கு இன்னும் அரசு ஒப்புதல் அளித்துவிடவில்லை. இது விவாதக் கட்டத்திலேயே இருக்கிறது' என்றார்.


     வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு இலவசமாக செல்போன்களை வழங்குவது பற்றி பிரதமர் மன்மோகன் சிங் எதிர்வரும் சுதந்திர தின விழா உரையில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. இது அமலுக்கு வந்தால் நாடு முழுவதும் 6.5 கோடி மக்களுக்கு செல்போன்கள் கிடைக்கும். 

     ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாம் அரசு ரூ. 60 ஆயிரம் கோடி மதிப்பிலான விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. அதன்பின், மிகப்பெரிய மக்கள் கவர்ச்சித் திட்டமாக இந்த செல்போன் திட்டம் இருக்கும் என்று கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக