புதன், 31 அக்டோபர், 2012

Karunanithi vs Jayalalithaa : கடிதம் எழுதி விட்டால் மின் பிரச்னை தீர்ந்து விடுமா?


     பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் கடிதம் எழுதி விட்டால் மின் பிரச்னை தீர்ந்து விடுமா? என்று ஜெயலலிதாவுக்கு கேள்வி எழுப்பியுள்ள கருணாநிதி, மின்சார பிரச்சினையை தீர்க்க முறையாக வழிகாண வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

     இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

     காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறையில் பணியாற்றும் சீருடை பணியாளர்களுக்கு வீடுகள் கட்டித்தரும் பணிக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஜெயலலிதா மின்சாரத்தை பற்றியும், மின்வெட்டை பற்றியும் விலாவாரியாகப்பேசி, மத்திய அரசையும், கடந்த கால திமுக அரசையும் எந்த அளவிற்கு குறை கூற முடியுமோ அந்த அளவிற்கு தாக்கிப்பேசி, இறுதியாக அடுத்த ஆண்டு இறுதிக்குள் மின் பற்றாக்குறை முழுவதும் தீர்க்கப்படும் என்று முடித்திருக்கிறார்.


பிரதமருக்கு கடிதம் :

     ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்ததாகவும், குஜராத் மாநிலத்தோடு மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போட்டதாகவும், மின்சாரத்தை விலை கொடுத்து வாங்கியும் தமிழகத்திற்கு கொண்டு வந்து சேர்க்க வழியில்லாத நிலைதான் தற்போது உள்ளது என்றும் பேசியிருக்கிறார்.

     ஒரு மாநிலத்திடம் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போடும்போதே, அதை வாங்க முற்படும்போது, அதை வாங்கினால் தமிழகத்திற்குக் கொண்டு செல்ல வழி இருக்கிறதா என்று பார்க்காமலே அதிமுக அரசு ஒப்பந்தம் செய்தது என்றால், அது எவ்வளவு பெரிய தவறு? அதுபோலவேதான் மத்திய அரசிடமிருந்து மின்சாரத்தை பெறுவதிலும், அவர்கள் கொடுக்க முன் வந்தால்கூட, அந்த மின்சாரத்தை எப்படி தமிழகத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பது என்ற திட்டம் இல்லாமல், அதைப்பற்றி யோசிக்காமல், பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் கடிதம் எழுதி விட்டால் பிரச்னை தீர்ந்து விடுமா?


ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை?

     மத்திய அரசை குறை கூறும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இந்த 18 மாதங்களில் எத்தனை முறை டெல்லி சென்று தமிழகத்தின் மின் தேவையைப் பற்றி பிரதமருடனோ, அல்லது துறையின் அமைச்சருடனோ பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்? ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை?

     அவருக்கு தனியாகச் சென்று கேட்க முடியாவிட்டால்கூட, சட்டப்பேரவையிலே உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களையும் அழைத்துப்பேசி, அவர்களையும் அழைத்துக் கொண்டு போய் டெல்லியிலே ஒரு முறையாவது கேட்டுக் கொண்டது உண்டா? முதல் அமைச்சருக்கே அதிலே அவ்வளவு அக்கறை இல்லை என்கிறபோது, திமுக மத்திய மந்திரிகள் அக்கறை காட்டவில்லை என்று அவர்கள் மீது குற்றம் கூறுவது எந்த விதத்தில் நியாயமோ, தெரியவில்லை!


     கடந்த கால ஆட்சியிலே ஏன் "காரிடார்" (மின்தொடர்பாதை) அமைக்கவில்லை என்று கேள்வி கேட்கிறார் ஜெயலலிதா. அப்போது தமிழகத்திலே தற்போது ஏற்பட்டுள்ளதைப்போல மின் பற்றாக்குறை ஏற்பட்டிருக்குமேயானால், அப்போதே திமுக அரசு மத்திய அரசிடம் "காரிடார்" அமைப்பதை பற்றிப்பேசியிருக்கும். ஆனால் கழக ஆட்சிக் காலத்திலே இந்த அளவிற்கு பற்றாக்குறை இல்லை. எனவே "காரிடார்" அமைக்கத் தேவையும் ஏற்படவில்லை.

ஆயத்தப் பணிகள் :

     ஆட்சிக்கு வந்தவுடனே ஆயத்தப் பணிகளைச் செய்து, ஆட்சியிலே இருந்தபோதே, தேர்தல் வருவதற்குள்ளாகவே மின் உற்பத்தியை தொடங்கி இருக்கலாமே? திமுக ஆட்சியிலே அப்படித்தானே 2006-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், உடனடியாக ஆயத்தப் பணிகளைச் செய்து, 2006-ம் ஆண்டிலும், 2007-ம் ஆண்டிலும், 2008-ம் ஆண்டிலும் மின் உற்பத்திக்கான திட்டங்கள் தொடங்கப்பட்டன.

     அப்படி தொடங்கிய திட்டங்கள் மூலமாகத்தானே இன்னும் இரண்டொரு மாதங்களில் தமிழ்நாட்டிற்கு மின்சாரம் கிடைக்கவுள்ளது. அதற்கெல்லாம் காரணம் திமுக ஆட்சியா? அல்லவா?


முறையான வழிகாணவேண்டும் :

     இக்கட்டான இந்த கால கட்டத்தில் திமுக சார்பில் தரப்படும் விளக்கங்கள் ஒருபுறமிருக்க,ஆட்சிப் பொறுப்பிலே உள்ள அதிமுக, மின்சாரப் பிரச்னையைத் தீர்க்க, சிந்தித்து, முறையாக வழி காண்பதை விட்டு விட்டு, வீண் குற்றச் சாட்டுகளை மற்றவர்கள் மீது அடுக்கிக் கொண்டு இருப்பது கண்டு யாரும் காலவரையறையின்றி பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து செயலாற்றுவதே சிறப்பு! என்று கூறியுள்ளார்.

நன்றி : ஜூனியர் விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக