ஞாயிறு, 28 அக்டோபர், 2012

Shark falls from the Sky : வானத்தில் இருந்து விழுந்த சுறா!


     வானில் இருந்து கோல்ப் கிளப் மைதானத்தில் சுறா மீன் திடீரென விழுந்ததால், கோல்ப் விளையாடி கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கலிபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கோல்ப் கிளப் மைதானத்தில் சில நாட்களுக்கு முன்னர் சிலர் கோல்ப் விளையாடி கொண்டிருந்தனர். 

     அப்போது திடீரென வானத்தில் இருந்து உயிருள்ள சுறா மீன் ஒன்று மைதானத்தில் விழுந்து துடித்தது. அதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுத்தை உடலில் இருப்பது போல் புள்ளிகள் நிறைந்த அந்த சுறா மீன் 2 அடி நீளம் இருந்தது. மீன் உடலில் காயங்கள் இருந்தன. 


     உடனடியாக கிளப் ஊழியர்கள் விரைந்து சென்று சுறாவை மீட்டனர். கிளப்புக்கு எடுத்து சென்று பக்கெட் தண்ணீரில் போட்டனர். இதுகுறித்து கிளப் நிர்வாகிகள் கூறுகையில், பசிபிக் கடலில் உள்ள மீன்களை, பருந்து போன்ற பறவைகள் கொத்தி செல்லும். அப்போது பறவையின் பிடியில் இருந்து சுறா நழுவி இருக்கும். 


     இது கடல் பகுதிகளில் வழக்கமாக நடப்பதுதான். பக்கெட் தண்ணீரில் உடனடியாக உப்பு கலந்து அதில் சுறாவை போட்டோம். சிறிது நேரம் சலனமில்லாமல் இருந்த சுறா, உயிர் பிழைத்து நீந்த தொடங்கியது. பின்னர் 5 கி.மீ. தொலைவில் உள்ள பசிபிக் கடலில் விட்டுவிட்டு வந்தோம் என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக