செவ்வாய், 23 அக்டோபர், 2012

Work Integrated Learning Programmes in Bits Pilani : வேலை பார்த்துக்கொண்டே படிக்கலாம்.


     வேலை பார்த்துக்கொண்டே படிக்கும் வாய்ப்பை வழங்குகிறது பிலானியில் உள்ள ‘பிட்ஸ்’ கல்வி நிறுவனம். என்ஜினீயரிங் டெக்னாலஜி, மேனுபாக்சரிங் மேனேஜ்மெண்ட், சாஃப்ட்வேர் சிஸ்டம்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

     அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவரா நீங்கள்? அது சார்ந்த துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும், படிப்பின் மீதான ஆர்வம் உங்களுக்குக் குறையவில்லையா? உங்களைப் போன்றவர்களின் உயர் கல்விக்கென்றே ஒரு வாய்ப்பை அளிக்க முன்வந்துள்ளது ராஜஸ்தான் மாநிலம் பிலானியிலுள்ள பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (பிட்ஸ்) கல்வி நிறுவனம்.



     1979-ஆம் ஆண்டு முதல் பல்வேறு தொழில் துறை நிறுவனங்களுடன் இணைந்து மனித வள மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது பிட்ஸ். அதில் ஒன்றுதான் வேலையுடன் ஒருங்கிணைந்த கற்றல் திட்டம் (Work Integrated Learning Programmes (WILP). வேலை சூழ்நிலையையும், கற்றல் சூழ்நிலையையும் ஒருங்கிணைத்து வழங்குகிறது பிட்ஸ் கல்வி நிலையம்.

     வேலையுடன் ஒருங்கிணைந்த இந்தப் படிப்பு, பல்வேறு பொறியியல் துறைகளில் வேலை பார்ப்பவர்களுக்கும், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களுக்கும் ஏற்ற படிப்பாகும். இப்படிப்பின் மூலம் தங்கள் துறை சார்ந்த கல்வி அறிவுடன், பணி அனுபவமும் பெற முடியும். தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே இந்தப் படிப்பைப் படிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. 



     தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் நடத்தும் பாடங்களைக் கேட்கவும், இணையதளம் மூலம் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறவும் முடியும். ஒவ்வொரு செமஸ்டரின் முடிவில், குறிப்பிட்ட ஒரு நகரத்தில் நடைபெறும் எழுத்துத் தேர்வை எழுத வேண்டியிருக்கும்.

     இந்த ஆண்டு (2012-2013) இத்திட்டத்தின்கீழ் பி. எஸ். என்ஜினீயரிங் டெக்னாலஜி, எம். எஸ். மேனுபாக்சரிங் மேனேஜ்மெண்ட், எம்.எஸ். சாஃப்ட்வேர் சிஸ்டம்ஸ் ஆகிய படிப்புகளில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.



     பி. எஸ். என்ஜினீயரிங் டெக்னாலஜி படிப்பு 6 செமஸ்டர்களை உள்ளடக்கியது. பொறியியல் சார்ந்த ஏதேனும் ஒரு தொழிற்சாலையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருபவர்கள் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்பத் துறையில் டிப்ளமோ படிப்பு அல்லது கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து பி.எஸ்சி. பட்டம் அல்லது அதற்குச் சமமான படிப்பு படித்திருக்க வேண்டும். தாம் வேலை பார்த்து வரும் தொழில் நிறுவன ஒப்புதலுடன் இப்படிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.



     எம். எஸ். மேனுபாக்சரிங் மேனேஜ்மெண்ட், எம். எஸ். சாஃப்ட்வேர் சிஸ்டம்ஸ் படிப்புகள் நான்கு செமஸ்டர்களை உள்ளடக்கியது. இப்படிப்புக்கு, பிட்ஸ் கல்வி நிறுவனம் அல்லது அதற்குச் சமமான கல்வி நிறுவனத்தில் படித்து பி. இ. அல்லது பி. டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சாஃப்ட்வேர் சிஸ்டம் துறையில் குறைந்தபட்சம் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.



     விண்ணப்பக் கட்டணம் : இப்படிப்பில் சேர விரும்புபவர்கள், விண்ணப்பக் கட்டணமாக ரூ.1500-ஐ நெட் பேங்கிங் மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும் அல்லது கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைனில் செலுத்தலாம் அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கிளைகளில் சலான் மூலம் பணமாக ரூ.1,525 கட்ட வேண்டும். `BITS, Pilani' payable at ICICI Bank Pilani அல்லது State Bank of India, Pilani என்ற பெயரில் டிடி எடுத்தும் அனுப்பலாம்.

     இந்தப் படிப்புக்கான அட்மிஷன் கட்டணம் ரூ.15,000. அத்துடன் ஒவ்வொரு செமஸ்டருக்கும் ரூ.32,700 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.



பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி : 31.10.2012

விவரங்களுக்கு : http://www.bits-pilani.ac.in/university/wilp/Admissions

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக