கொஞ்சம் உயரமான மாடியில் ஏறி நின்றாலே தலை சுற்றும் பலருக்கு. கிட்டத்தட்ட 39 ஆயிரம் அடி உயரத்தில், அனாயாசமாக அன்றாடம் பறக்கிறார் தீபா ஐயர். ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘சீனியர் கேப்டன்’. அதாவது பைலட். நூற்றுக்கணக்கான பயணிகளை ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு கொண்டு சேர்க்கிற பொறுப்பான வேலை.
கண்களில் தீர்க்கம், உடலில் தெம்பு, மனதில் உறுதி. ஒரு பைலட்டுக்கான அத்தனை இலக்கணத்துக்கும் பொருத்தமானவர் என்பது தீபாவைப் பார்த்தாலே தெரிகிறது! சின்ன வயசுல வானத்துல பறக்கற ஃப்ளைட்டை பார்த்து கைத்தட்டி சிரிப்பேன். இப்போ அதே ஃப்ளைட்ல அப்பா, அம்மாவை உட்கார வச்சு, நானே ஓட்டினது மறக்க முடியாத அனுபவம் நெகிழ்ச்சியோடு சொல்கிறார் தீபா ஐயர்.
இந்தத் துறையில் அவரது 13 வருட அனுபவம் பேச்சிலேயே தெரிகிறது. ‘சொந்த ஊர் திருவனந்தபுரம். அப்பா கிருஷ்ணய்யர். அம்மா மங்களம். எங்க வீட்டுல ரெண்டு பொண்ணுங்க. நான்தான் கடைக்குட்டி. அப்போ எனக்கு 12 வயசு இருக்கும். திருவனந்தபுரம் ஸ்கூல்ல படிச்சுகிட்டு இருந்தேன்.
ஒரு தடவை ‘விமான சாகச நிகழ்ச்சி நடக்குது’ன்னு ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டுப் போனாங்க. வானத்துல விமானங்களோட அணிவகுப்பு. வண்ணங்களை வானத்தில் தெளித்து சாகசம் பண்ணிட்டு இருந்த விமானங்களைப் பார்க்கறதே அவ்ளோ அழகா இருந்துச்சு. நாமளும் அந்த உயரத்துக்குப் போகணும்னு அப்போதான் தோணிச்சு.
வீட்டுக்கு வந்ததும், அதே மாதிரி ஒரு ஃப்ளைட் வாங்கணும், நான்தான் அதோட டிரைவர்னு சொல்லிக்கிட்டே இருந்தேன். சைக்கிள் ஓட்டுற வயசுல ஃப்ளைட் வாங்க ஆசைப்படுறாளேன்னு அப்பாவும் அம்மாவும் சிரிச்சுக்கிட்டே சொன்னாங்க.
கொஞ்ச நாள்ல என் கவனம் ஸ்போர்ட்ஸ் பக்கம் திரும்பிச்சு. சைக்கிளிங்ல ஆர்வம் வந்துச்சு. 7 வருஷ காலம் சைக்கிளிங்ல நேஷனல் லெவல் சாம்பியன்ஷிப். ஆசிய அளவுல நடந்த போட்டிகள்லயும் நிறைய பதக்கங்கள் வாங்கியிருக்கேன். என் திறமையைப் பார்த்துட்டு கேரள பல்கலைக்கழகம் ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல செனட் மெம்பர் பதவி குடுத்தது.
ரொம்ப சின்ன வயசுல அந்தப் பதவிக்கு வந்த ஆள் நான்தான். அப்போ நான் டிகிரி கூட படிக்கலை. வெறும் ப்ளஸ் டூ தான். 1991ல ‘வாயுதூத்’ ஏர்லைன்ஸ்ல எனக்கு சீனியர் டிராஃபிக் அசிஸ்டென்ட் பதவி கொடுத்தாங்க. அதுவும் ஸ்போர்ட்ஸ் கோட்டாவுலதான்!’
ஏர்போர்ட்டுக்குள்ள வர்ற பயணிகளோட லக்கேஜ், டிக்கெட் எல்லாத்தையும் செக் பண்றதுதான் என்னோட வேலை. அப்புறம் காமர்ஸ் கோர்ஸ் எடுத்து, டிகிரியை முடிச்சேன். இந்தியன் ஏர்லைன்ஸ்ல ஏர் ஹோஸ்டஸ் வேலை கிடைச்சது. விமானத்துக்குள்ள போய் பார்த்தப்போதான் அதோட பிரமாண்டம் புரிய ஆரம்பிச்சது.
நாம ஏன் இந்த ஃப்ளைட்டை ஓட்டுற ஆளா வரக்கூடாதுன்னு யோசிச்சேன். பைலட் ஆகணும்னா ப்ளஸ் டூல இயற்பியல், கணிதம் படிச்சுருக்கணும்னு சொன்னாங்க. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சேன். ப்ளஸ் டூல ஃபர்ஸ்ட் குரூப் எடுத்தேன். பாஸ் பண்ணினேன். மெட்ராஸ் ஃபிளையிங் கிளப்ல சேர்ந்தேன். அதுக்காகவே சென்னையில செட்டில் ஆனது எங்க குடும்பம்.
தினமும் அதிகாலையிலயே ஃப்ளையிங் கிளப்புல போய் உட்கார்ந்திருப்பேன். கொஞ்சம் கொஞ்சமா விமானம் ஓட்டக் கத்துக்கிட்டேன். பைலட் லைசன்ஸ் வாங்கினேன். அங்க சின்ன விமானம் ஓட்டுறதுக்குத்தான் சொல்லித் தருவாங்க. அதனால மேற்கொண்டு படிக்கறதுக்கு அமெரிக்கா போனேன்.
அங்கே ஃப்ளைட்டைப் பத்தி ஏ டூ இசட் கத்துக்கிட்டேன். ரொம்ப தன்னம்பிக்கையோட இங்க வந்தேன். நான் திரும்பி வந்தவுடன் இந்தியன் ஏர்லைன்ஸ்ல வேலை கிடைச்சது. ஆரம்பத்துல ட்ரெய்னி பைலட்டாதான் என்னோட பயணம் ஆரம்பிச்சது.
பைலட்டா சென்னையில இருந்து ஹைதராபாத்துக்குப் போனதுதான் முதல் பயணம். ஆரம்பத்துல பிரமிப்பை உண்டாக்கின ஃப்ளைட், போகப்போக நெருக்கமான ஒரு ஃபிரெண்டா மாறிடுச்சு. படிப்படியா கோ-பைலட்டா ஆகி, இப்போ கமாண்டர்னு சொல்லப்படுற கேப்டனாயிட்டேன்.
89 டன் எடையுள்ள ஃப்ளைட், கிட்டத்தட்ட 180க்கும் அதிகமான பயணிகள்னு ஏகப்பட்ட பொறுப்புகளைச் சுமந்துகிட்டு ஃப்ளைட்டை இயக்குறேன். உள்ளே நான் இருக்குற இடத்துக்கு பேர் ‘ஃப்ளைட் டெக் ஏரியா’. ஏகப்பட்ட மிஷின்கள் இருக்கும். அங்கே நானும் கோ-பைலட் ஒருத்தரும் இருப்போம்.
எங்க ரெண்டு பேரை நம்பித்தான் ஃப்ளைட் இருக்கு. அதனால ரொம்ப பொறுப்பா செயல்படணும். நம் பிரமிப்பை கவனிக்காமல் பேசிக்கொண்டே போகிறார் தீபா. சவால்களும் ஆபத்தும் நிறைந்த துறைக்குள் நுழைய தீபாவை வீட்டில் எப்படி அனுமதித்தார்கள்? கேட்டால் சிரித்த முகமாக பதில் சொல்கிறார் தீபா.
என்னோட எந்த ஆசையா இருந்தாலும் அம்மாவும் அப்பாவும் நிறைவேத்தி வச்சுடுவாங்க. பைலட் ஆகணும்னு சொன்னபோதும் அவங்க எந்தத் தடையும் சொல்லலை. அவங்களோட ஆசிர்வாதம்தான் என்னை இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. ஃப்ளைட்ல போறப்போ ரொம்ப கவனமா இரு. பயணிகள் உன்னை நம்பித்தான் வர்றாங்க.
அவங்க எல்லாரையும் நம்ம சொந்தங்களா நினைச்சு ஃப்ளைட்டை ஓட்டுன்னு அம்மா சொன்னதைத்தான் ஃபாலோ பண்ணிகிட்டு இருக்கேன். வீட்டுக்கு திரும்பி வர்ற வரை எனக்காகக் காத்திருக்குற அப்பா, அம்மா, என்னோட செல்ல நாய்க்குட்டி மோக்லின்னு அன்பானவங்களுக்கு நடுவுல வாழுறேன்! வீட்டுல மட்டும்தான் நான் பொண்ணு. ஏர்போர்ட்டுக்குள்ள ஆண்-பெண் பாகுபாடெல்லாம் கிடையாது.
கடந்த மாதம், அசாம் மாநிலம் சில்சாரில் உள்ள கும்பிர்கிராம் விமான நிலையத்தில் இருந்து விமானம் கிளம்பியது. மொத்தம் 53 பேர். அந்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கியது ஊர்மிளா யாதவ் என்கிற பெண் பைலட். அவருடன் இருந்த கோ-பைலட்டும் பெண்தான். பெயர் யாஷு. விமானம் பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அதன் முன்சக்கரம் கழன்று விழுந்து விட்டது. சக்கரம் இல்லாமல் விமானத்தைத் தரை இறக்குவது ரிஸ்க்கான விஷயம்.
அதனால் எரிபொருள் தீரும் வரை பல முறை வானிலேயே விமானத்தை வட்டமடித்தார் ஊர்மிளா. பிறகு, பாதுகாப்பாக விமானத்தைத் தரையிறக்க முயற்சி செய்தார். அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் பத்திரமாக இறங்கினார்கள் பயணிகள். இவரின் இந்த சாதுரியமான செயல்பாட்டால் வெடித்துச் சிதற வேண்டிய விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இப்படிப்பட்ட பெண்கள்தான் இன்றைய சமூகத்துக்குத் தேவை என்று அசாம் முதல்வர் தருண் கோகோய் ஊர்மிளா யாதவைப் பாராட்டித் தள்ளியிருக்கிறார்!
நம்ம திறமையை நாமதான் நிரூபிக்கணும். இந்த வேலையில உடல் உழைப்பு அதிகமா இருக்காது. எல்லாமே மெஷின் கட்டுப்பாட்டுல இருக்கறதால ரொம்ப ஈஸியா ஃப்ளைட்டை இயக்கலாம். ஆனா, மென்ட்டல் ஸ்ட்ரெஸ் அதிகமா இருக்கும். எதுக்கு எந்த பட்டனை யூஸ் பண்ணணும்கறதை சரியான நேரத்துல தீர்மானிக்கணும். ஒரு நொடி தாமதிச்சாலும் ஆபத்து.
எந்த இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் நாமதான் அதை சரி பண்ணணுமே தவிர, மத்தவங்க மேல பழி போடுற வேலை இங்க நடக்காது. அதனால ரொம்ப கவனமா வேலை பாக்கணும். சைக்கிள் ஓட்டுற மாதிரி வளைஞ்சு, நெளிஞ்சு, யூ டர்ன் அடிச்சு இதுல சாகசம் பண்ண முடியாது. வானம், மேகம், மிஷின் இதெல்லாம்தான் கண்ணு முன்னாடி இருக்கும்.
ரொம்ப கவனமா இருக்கணும். மழைக்காலத்தில ஃப்ளைட் ஓட்டுறதுதான் கொஞ்சம் சவால். அதுலயும் குளிர்பிரதேசங்கள் பக்கம் போறப்போ, உடம்பு விறைச்சுப் போற மாதிரி ஆயிடும். மனசையும் உடம்பையும் திடப்படுத்திக்கிட்டதால இப்போ ரொம்ப தைரியமா இருக்கேன். பாங்காக், சிங்கப்பூர், ஷார்ஜா, மஸ்கட்னு பல இடங்களுக்குப் போயிட்டேன். உள்ளூர் ஃப்ளைட்டும் ஓட்டுறேன்.
ஒருநாளைக்கு 8 மணிநேரம்தான் பைலட்டுக்கு வேலைன்னு அரசு தீர்மானிச்சிருக்கு. வாரத்துல ஒருநாள் லீவு. மத்த எல்லா நாள்லயும் ஃப்ளைட்லதான் பயணம். உடம்பு நல்லாயிருந்தாத்தான் அவ்ளோ பெரிய ஃப்ளைட்டை இயக்க முடியும். அதனால ஹெல்த் மேல எப்பவும் கவனமா இருப்பேன். ஹெல்த்தியான உணவுகளை சாப்பிடுவேன். 6 மாசத்துக்கு ஒரு தடவை மெடிக்கல் செக் அப் பண்ணுவாங்க. எப்பவுமே அளவா சாப்பிட்டு, உடம்பை ஃபிட்டா வச்சுக்கணும்கறது என்னோட பாலிசி.
இந்த வேலையைப் பொழுதுபோக்கா நினைக்காம உண்மையான உணர்வோட, பொறுப்பா செய்யணும். வீட்டுல நடக்குற விசேஷம், பண்டிகை மாதிரியான சின்னச் சின்ன சந்தோஷங்களை சில நேரங்கள்ல இழக்க வேண்டி வரும். ஆனாலும் டெடிகேஷனோட ரசிச்சு இந்த வேலையை செய்யிறப்போ கிடைக்கிற மனதிருப்தி வேற எந்த வேலையிலயும் கிடைக்காது. பைலட் யூனிபார்மை போடுறப்போ கிடைக்கிற கம்பீரமும் தைரியமும் சந்தோஷமும் வேற எதுலயும் எனக்குக் கிடைக்கிறதில்லை கண்களில் பரவசம் பொங்கச் சொல்கிறார் தீபா.
பைலட் கோர்ஸ் எங்கு படிக்கலாம்?
பைலட் கோர்ஸுக்கு இப்போ பெரிய அளவுல டிமாண்ட் இருக்கு. இதுல சேர, ப்ளஸ் டூல கணிதம், இயற்பியல் பாடங்கள் படிச்சிருக்கணும். 50 சதவிகித மார்க் போதும். உடல்தகுதி முக்கியம். பார்வைக் குறைபாடு இருக்கக் கூடாது. ஆரம்பத்தில் ‘பைலட் ஆக்டிவ் டெஸ்ட்’ நடத்துவாங்க. அதுக்கப்புறம்தான் ஸ்டூடன்ட் பைலட் லைசன்ஸ் கிடைக்கும்.
தமிழ்நாட்டுல சென்னை, கோயம்புத்தூர்ல ஃபிளையிங் கிளப்புகள் இருக்கு. நிறைய பிரைவேட் ஃபிளையிங் கிளப்புகளும் இருக்கு. டிரெயினிங்ல 250 மணி நேரம் ஃப்ளைட் ஓட்டினா ‘கமர்ஷியல் பைலட்’ லைசன்ஸ் கிடைக்கும். படிச்சாலே வேலைங்கறது இந்தத் துறையில உறுதி. உடம்பை எப்பவும் ரொம்ப ஃபிட்டா வச்சுக்கணும்.
இந்த கோர்ஸ் படிக்க குறைஞ்சது ரூ. 25 - 35 லட்சம் வரை செலவாகும். சாகசங்களை விரும்புறவங்களுக்கு இது சரியான துறை. மாதம் 1 லட்சம் ரூபாய் கூட சம்பாதிக்கலாம்!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக