செவ்வாய், 23 அக்டோபர், 2012

THIRUMANTIRAM - 41 வணங்குவார் மனத்தகத்தான்!


41.                        சினம்செய்த நஞ்சுஉண்ட தேவர் பிரானைப் 
                             புனம்செய்த நெஞ்சிடைப் போற்றவல் லார்க்கு, 
                             கனஞ்செய்த வாள்-நுதல் பாகனும் அங்கே  
                             இனஞ்செய்த மான் போல் இணங்கிநின் றானே.

     திருப்பாற்கடலில் சீறி எழுந்து வந்த நஞ்சை உண்டருளிய தேவர்களின் தலைவன் சிவபெருமான். அவனைத் திருத்திய விளை நிலம் போன்ற மனத்தில் கொண்டு வணங்க வல்லார்க்கு நாத ஒலி  காட்டிய உமையொரு பாகன். அடியார் மனத்தில் பெண் மானைக் கண்ட ஆண் மான் போல் கூடி நின்றவன். 


     விளக்கம் :  சினம் செய்த நஞ்சு - தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது சீற்றத்துடன் எழுந்த விடம். புனம் செய்த நெஞ்சு - திருத்தப்பட்ட வயல் போன்ற மனம்; குற்றம் நீங்கிய நெஞ்சு. கணம் செய்த வாணுதல் பாகன் - நாத ஒலி காட்டிய ஒளியுடைய நெற்றியையுடைய உமையொரு பாகன். இனம் செய்த மான் போல் - பெண் மானைக் கண்ட ஆண்மான் போல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக