புதன், 26 டிசம்பர், 2012

THIRUMANTIRAM - 74 திருக்கூத்தைத் தரிசித்துக் கொண்டிருந்தேன்!


74.                        செப்பும் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்     
                             அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்    
                             தப்புஇலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின் 
                             ஒப்பில் எழுகோடி யுகம்இருந் தேனே.

     சிவாகமம் சொல்ல வல்லவன் என்னும் அந்தத் தகுதியைப் பெற்றும், அத்தகுதியை அருளும் குருவின் திருவடியைப பெற்றும், சிரசின் மேல் குறைவற்ற வானம் பெருவெளியில் ஒப்பில்லாத ஒளி அணுக்களின் அசைவைத் தரிசித்த பின்பு ஒப்பில்லாத ஏழு ஆதாரங்களும் விளங்குமாறு ஊழிகள் பல அமைந்திருந்தேன்.




     விளக்கம் :  தப்பிலா மன்று - தலையுச்சியில் விளங்கும் சிதாகாயப் பெருவெளி. தனிக்கூத்து - ஆடிக் கொண்டிருக்கும் அணுக்களின் அசைவு. எழுகோடியுகம் - மூலாதாரம் முதல் சகசிரதளம் வரையுள்ள ஏழு ஆதாரங்கள். கோடி - எல்லை. முனையுகம் - இரண்டின் சேர்க்கை. உ டலில் உள்ள ஏழு ஆதாரச் சக்கரங்களும் உள்ளே இருந்து வெளிப்படும் கதிரவன் கலைகளையும், வெளியிலிருந்து உள்ளே புகும் சோமக் கலைகளையும் இயக்குகின்றன. உடலையே தான் என நினைப்பவர் எவரும் இதனை அறிய மாட்டார். சிவயோகம் பயில்பவர் உடலைச் சூழவும் உடலுக்குள்ளும் ஒளிக்கதிர்கள் பாய்ந்து உள்ளேயும் வெளியேயும் இணைவதை அறிவர். இவ்வகையில் திருமூலர் ஏழு ஆதாரங்களையும் ஒளி நெறி பற்றி உள்ளும் புறமும் ஒன்றுபடுத்தி 'ஒளிமயமாய் உள்ளேன்' என்றார். நெடுங்காலம் அவர் அங்ஙனம் இருந்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக