வெள்ளி, 7 டிசம்பர், 2012

Solar Power : கூடலூரில் சூரிய மின் சக்தி!



     கூடலூரில் நூற்றாண்டு காலமாக மின் சப்ளை இல்லாத மேலம்பளம் ஆதிவாசி கிராமத்தில் 'சூரிய மின் சக்தி சேமிப்பு நிலையம்' அமைத்து, வீடுகள், தெரு விளக்குகளுக்கு மின் சப்ளை வழங்கப்பட்டுள்ளது.

     நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஆதிவாசி இனத்தை சேர்ந்த பனியர், குரும்பர், காட்டுநாயக்கர் மக்கள் வனப் பகுதியை ஒட்டிய குக்கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். அடிப்படை வசதியின்றி குடிசைகளில் வசித்து வந்த இவர்களுக்கு, தற்போது, அரசு தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், இலவச கல்வி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.



     ஆனால், பல கிராமங்களில் வனத்துறையின் விதிகள் காரணமாக, வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க முடியாத நிலையுள்ளது. இதனால், பல ஆதிவாசி கிராமங்களுக்கு, 'சூரிய மின் சக்தி' மூலம் மின் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

     முதல் கட்டமாக, மலைப் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து, கூடலூர் ஸ்ரீ மதுரை மேலம்பளம் மற்றும் மானிமூலா பனியர் காலனியில், தலா ஒரு யூனிட்டுக்கு ஒரு கிலோ வாட் சக்தி கொண்ட 'சூரிய மின் சேமிப்பு நிலையம்' அமைத்து, அதிலிருந்து வீடுகளுக்கும், தெருவிளக்குகளுக்கும் மின் சப்ளை வழங்கப்பட்டுள்ளது. இதனால், மேலம்பளம் கிராமத்தில் 28 வீடுகளிலும், மானிமூலாவில் 16 வீடுகளிலும் பயன் அடைந்துள்ளன.


     தெரு விளக்குகள் மாலை 6.00 முதல் காலை 6.00 மணி வரை மட்டும் எரிந்து அனையும் வகையில், 'சென்சார்' பொருத்தப்பட்டுள்ளது. கிராமத்தில், பொதுவான ஓர் இடத்தில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதியும் வழங்கப்ட்டுள்ளது.

     திட்டம் குறித்த ஆதிவாசி மக்கள் கூறுகையில், "இத்திட்டம் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. தொடர்ந்து பராமரிக்கவும், கூடுதல் மின் விளக்குகள் மற்றும் 'டிவி' பயன்படுத்தும் வகையிலும், கூடுதல் மின் சப்ளை வழங்க வேண்டும்' என அப்பகுதியினர் தெரிவித்தனர். 'இத்திட்டம் மின்சாரம் இல்லாத மற்ற ஆதிவாசி கிராமங்களிலும் விரிவு படுத்தப்படும்,' என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி : தினமலர்.

1 கருத்து:

  1. இது மிகவும் நல்ல செயல்.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு