திங்கள், 24 டிசம்பர், 2012

THIRUMANTIRAM - 73 சிவபெருமானைத் தியானித்து நூலைத் தொடங்குகின்றேன்!


73.                        நந்தி திருஅடி நான் தலைமேற் கொண்டு    
                             புந்தியின் உள்ளே புகப்பெய்து, போற்றிசெய்து   
                             அந்தி மதிபுனை அரனடி நாள்தொறும் 
                             சிந்தைசெய்து ஆகமம் செப்பலுற் றேனே. 

     என் குருநாதனான நந்தியின் இரண்டு திருவடிகளையும் என் தலைமேற் கொண்டு, அறிவில் நிறுத்தி வணக்கம் செய்து, முச்சந்தி வீதியில் பொருந்திய மதி சூடிய சிவபெருமானின் திருவடிகளை நாள்தோறும் நினைந்து, தியானித்துத் திருமந்திரம் என்ற ஆகம நூலான இதனைச் செய்யத் தொடங்குகிறேன் என்று கூறுகிறார்.

     விளக்கம் :  இணையடி - இரண்டு திருவடி. புந்தி - அறிவு; புத்தி என்பதன் மெலித்தல் விகாரம். அந்தி - முச்சந்தி. புருவ மத்திக்கு மேல் உள்ள நெற்றிப் பகுதி. அரன் - சிவபெருமான். ஆகமம் - இறைவன் நூல்; திருமந்திரமான நூல் ; ஆ + கமம் - ஆ - ஆவி. கமம் - நிறைவு; உயிரை நிறையச் செய்வது. அதாவது வீடுபேறு அளித்துப் பிறவியைப் போக்குவது. இந்நிலையில் உயிருக்கு உண்டாகும் நிறைவு என்பது கருத்து. ஆவியின் அறிவை நிறைவிக்கும் எனவும் உரைக்கலாம்.


இயல்பான வாழ்வு 

பக்தி நெறி 

ஞான நெறி 

     சிவபெருமானை வணங்கும் நெறி பக்தி நெறி, ஞான நெறி என இரண்டு. உருவம் பற்றியது பக்தி நெறி. இது அநாகதச் சக்கரத்தில் தியானம் செய்யப்படுவதாகும். ஞான நெறி என்பது உருவம் இல்லாத சோதி வழிபாடு ஆகும். இறைவனின் இரண்டு கண்களும் திருவடிகள் என்பது நூல் குறிப்பு. எனவே இவற்றினது துணையால், குரு காட்டிய நெறியில் நின்று பழகின் நெற்றிக் கண என்ற அறிவுக்கண் விழிக்கும். அதுவே யோக நெறி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக