குடும்பத்தினரை எதிர்த்து நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதி, அடுத்த சில நிமிடங்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதா மாவட்டத்தைச் சேர்ந்தவர் யாஷ்மின் (19). இவர் தன்னுடைய உறவினர் நசீர் (21) என்பவரை காதலித்து வந்தார். யாஷ்மின் குடும்பத்தினருக்கு இதுபற்றி தெரிந்தபோது, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரையும் பிரிக்க திட்டமிட்டனர்.
இந்நிலையில், பெற்றோர் தன்னுடைய காதலனை பிரித்து விடுவார்கள் என்று பயந்த யாஷ்மின், காதலனை ரகசியமாக கைபிடிக்க திட்டமிட்டார். இதற்காக நேற்று முன்தினம் சர்கோதா மாவட்ட நீதிமன்றத்தில், தன்னுடைய காதலனுடன் நீதிபதி முன்பு ஆஜரானார். தங்களுடைய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால், நீதிமன்றமே தங்களுக்கு திருமணம் செய்துவைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரினார்.
இருவரும் மேஜர் என்பதால், அவர்களுக்கு நீதிபதி திருமணம் செய்து வைத்தார். இதற்கிடையே, யாஷ்மினின் மாமா பரூக் அவான் என்பவர் தனது கூட்டாளிகளுடன் நீதிமன்ற வாயிலில் காத்திருந்தார். திருமணம் முடிந்து காதல் தம்பதி மகிழ்ச்சியுடன் வெளியே வந்த போது, அவர்களை காத்திருந்த கும்பல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுத் தள்ளியது. இதில் இருவரும் அதே இடத்தில் இறந்தனர்.
நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உடனடியாக ஓடி வந்தனர். இதைப்பார்த்தும், பரூக் அவானும் மற்றவர்களும் தப்பி ஓடினர். ஆனால், பரூக் அவான் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். தங்கள் குடும்பத்துக்கு இழுக்கு ஏற்படுத்தியதால், இருவரையும் சுட்டுக்கொன்றதாக அவர் தெரிவித்தார். அவரை சிறையில் அடைத்த போலீசார், தப்பி ஓடிய அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
பாகிஸ்தானில் இதுபோன்ற கவுரவக் கொலைகள் அடிக்கடி நடக்கின்றன. குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் இதுபோன்ற கொலைகள் நடப்பது வாடிக்கையாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக