சனி, 8 செப்டம்பர், 2012

Life is a Challenge முகவரி இல்லாத முகங்கள்!

 
     சமீப காலமாக நிறைய தற்கொலை செய்திகள், தற்கொலை செய்தவர்களில் திருச்சியை சேர்ந்த நட்சசத்திர ஒட்டல் அதிபர் முதல் சென்னையைச் சேர்ந்த சீனியர் டாக்டர் வரை உண்டு. இது போக ஐஐடி மாணவர்கள், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்று பட்டியல் நீளும்.

     இவர்களது தற்கொலைக்கு காரணம் நிச்சயமாக வறுமை கிடையாது. ஏதோ ஒரு தோல்வி, ஒரு சறுக்கல், ஒரு பிரச்னை, ஒரு கவலைதான் இவர்களை சட்டென இப்படி ஒரு முடிவு எடுக்கவைத்துள்ளது.


     ஆனால்  வாழ்க்கையில் நித்தமும் எத்தனையோ தோல்விகள், பிரச்னைகள், சறுக்கல்கள், கவலைகளுடன் அன்றாட சாப்பாட்டிற்கே வழியில்லாத வறுமையுடன் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களும் இந்த தேசத்தில் ஆயிரக்கணக்கில் உண்டு. அவர்களின் பிரதிநிதிதான் பவானி.




     ஓரு வார்த்தையில் சொல்வதானால் சென்னை பிராட்வேயின் பிளாட்பாரவாசி. எங்க தாத்தா, எங்க அம்மா, நான், என் பொன்னுங்க, பொன்னோட பசங்கன்னு ஐந்து தலைமுறையா இங்கேதான் வாழ்றோம், பல்லு விலக்குறதுல இருந்து படுக்கிறது வரை எல்லாம் இங்கேதான். 

     நிரந்தரமான பொழப்பும் இல்லை, நிரந்தரமான வருமானமும் கிடையாது. அன்றாடம் என்ன கிடைக்குதோ அத வச்சு சாப்பிடுவோம், ஒண்ணும் கிடைக்கலைன்னா தண்ணிய குடிச்சுட்டு படுத்துக்குவோம்வீட்டு ஆம்பிளைகளுக்கு பொழப்பு இருக்குது ஆனா அதுல வர்ர வருமானத்தை முழுசும் குடிச்சே அழிக்கிறாங்க. எம் புருஷன் இதுவரை, இந்தாடி நாம் சம்பாதிச்சதுன்னு ஒத்த ரூபா கொடுத்தது கிடையாது.





     நான் வயசுக்கு வந்த நாள்ல இருந்தே துரத்தி, துரத்தி காதலிச்சாரு. நம்பளையும் ஒரு மனுஷன் விரும்பறாரேன்னு கட்டிக்கிட்டேன். அப்ப பிக்பாக்கெட் அடிச்சுட்டு இருந்தாரு. அதெல்லாம் தப்பு கூடாதுன்னு சொன்னதுக்கப்புறம் சைக்கிள் ரிக்ஷா ஒட்டறாரு. அதுல சொற்ப வருமானம்தான் வரும். அதை அப்படியே எடுத்துட்டு போய் குடிச்சுட்டு கவிந்தாருன்னா அப்புறம் ஒரு வாரம் ரிக்ஷா ஓட்டமாட்டாரு. பேருக்கு புருஷனா இருக்காரு. இவரால ஐந்து புள்ளைக பிறந்ததுதான் மிச்சம்.




     மூணு பொன்னுங்க, ரெண்டு பசங்க, மூத்த பொன்னுக்கு கல்யாணம் பண்ண கொஞ்ச நாள்ல மாப்பிள்ளை இறந்துட்டான். கேட்டதுக்கு அவனுக்கு எய்ட்ஸ் நோய்னாங்க. அதுக்கு பிறகு என் தம்பிய சேர்த்துவச்சுகிட்டு வாழ்றா. இரண்டாவது பொண்ணு கல்யாணம் பண்ணி போன கொஞ்ச நாள்ல புருஷன் சரியில்லைன்னு திரும்ப இங்கேயே வந்துட்டா. மூனாவது பொண்ணு வீட்டு வேலைக்கு போய்ட்டு இருக்கா. 

     பெரிய பையன் மீன்பாடி வண்டி ஒட்டுறான். சின்னவன் ஆட்டோ மெக்கானிக் இருக்கான். இரண்டு பேரும் அப்பனை போலவே ரெண்டு காசு சம்பாதிக்கிறதுக்குல்ல நாலு காசுக்கு குடிப்பானுக. குடிக்க வாங்க கடனுகள அடைக்கவே அவுனுகளுக்கு ஆயுள் போதாது. அப்புறம் எப்படி ஆத்தாளுக்கும், கூடப்பொறந்தவகளுக்கும் கொடுப்பானுக.






     அதுனால என் வயத்துப்பாட்டை நான்தான் பாத்துக்கணும், ரோட்டில கொட்டுற அட்டைப்பெட்டி, மற்றும் காகிதங்களை பொறுக்கி கொண்டு போய் எடைக்கு போடுறதுல நூறு, நூத்தைம்பது ரூபாய் கிடைக்கும். கிடைக்கறத வச்சு கஞ்சியோ, சோறோ ஆக்கி சாப்பிட்டுக்குறோம். அவ்வப்போது பூ கட்டி கொடுத்து அதுல வர்ர காச சேத்துவச்சு ஒட்டல்ல  போய் நானும் என் பொண்ணுகளும் சாப்பிடுவோம்.

     ரேஷன் கார்டுக்கு, அடையாள அட்டையெல்லாம் இருக்கு. ஆனா அதல இருக்கிற அட்ரஸ் எங்களுக்கு எதிரா உள்ள கடை அட்ரஸ்தான். என்ன மாதிரி இங்க இருக்கிற எல்லாருக்குமே  அந்த கடைதான் முகவரி. மற்றபடி அட்ரஸ் இல்லாத ஆளுங்க நாங்க.

     குடிகார புருஷனால அடி, உதைக்கு பஞ்சமேயில்லை. அக்கறை இல்லாத புள்ளைகளால ஏச்சுக்கும், பேச்சுக்கும் குறையேயில்லை. யாருக்கும் படிப்பறிவு இல்ல. சொத்து பத்து என்றோ சொந்த பந்தம் என்றோ சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் இல்லை. வெறுத்துப்போய் எங்காவது கால் போன போக்கில் போவேன். 




     அப்புறம் எங்கேன்னு போறாதுன்னு திரும்ப இங்கேயே வந்துடுவேன். நடுரோட்டிலே பிளாஸ்டிக்கை கட்டிட்டு குளிப்போம். மழைக்காலம் வந்தா ரொம்ப கஷ்டம் எதையாவது தலைக்கு மறைவா பிடிச்சுட்டு உட்கார்ந்துட்டே விடிய, விடிய தூங்குவோம் என்னய்யா செய்யறது 'வாழ்ந்தாகணுமே'.

     தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. ஆனால் இங்கோ வாழ்வாதாரமே இல்லாமல் போய்விட்டதே? இதற்கு யார் காரணம்? இந்தியா வல்லரசாகிக் கொண்டிருக்கிறது என்று கூறும் அரசியல்வாதிகளா? 



     2G, நிலக்கரி, கிரானைட் என்று  கோடிகோடியாக ஊழல் செய்யும் ஆளும் வர்க்கமா? தமிழனைக் காட்டிக்கொடுத்த  கூட்டமா? சிதம்பர ரகசியத்தைக் கட்டிக் காப்பாற்றும் மௌன சாமியாரா? இல்லை இவர்களுக்கு ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த இந்த மக்களா? மக்கள் திருந்த மாட்டார்களா? சிந்திக்க மாட்டார்களா? ஓட்டுக்கு விலை போகும் சிலர்  இருக்கும் வரை அனைவருக்குமே இந்த அவலம் தொடரும்.

     ஒரு லட்சம் கோடி, இருபதாயிரம் கோடி என்கிறார்களே, இந்த பாமர ஜனங்கள் தெருக்கொடியைத் தவிர வேறெதையும் பார்த்ததில்லை.

     இந்திய சுதந்திரத்திற்காக  தங்கள் இன்னுயிரை இழந்த லட்சக்கணக்கான தியாகிகள் நாட்டுக்காக தங்கள் சொத்து சுகங்களை இழந்தார்கள். மகாகவி பாரதி, வ. உ. சி., கொடி காத்த குமரன், நேதாஜி இன்னும் வெளியில் தெரியாத எத்தனையோ தியாகிகள் பாடுபட்டது இதற்காகத்தானா?

     மதுக்கடைகளால் வருகின்ற வருமானத்தை வைத்துத்தான் அரசாங்கத்தை நடத்துவதென்றால்  அப்படி ஒரு அரசாங்கம் தேவையில்லை.

     மீண்டும் ஒரு வேலுப்பிள்ளை வாரிசு வருவாரா? நேதாஜி வருவாரா? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக