சனி, 18 மே, 2013

THIRUMANTIRAM - 77 ஐந்தொழிற் கூத்தைக் கூற வந்தேன்!


77.                        மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்       
                             நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு 
                             மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின் 
                             சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.

     மாலாங்கன் என்பவனே! இத்தென்திசைக்கு நான் வந்த காரணம் என்னவென்றால் நீல நிறமான மேனியையும் சிறந்த அணிகளையும் உடைய சிவகாமி அம்மையுடன் மூலாதாரத்தை இடமாகக் கொண்டு சதாசிவம் நடிக்கும் ஐந்தொழில் கூத்தின் இயல்பை விளக்கும் வேதத்தை மக்கட்குக் கூறவந்தேன்.  



     விளக்கம் :  மூலாங்கம் - மூலம் + அங்கம்; மூலாதாரம். சீலம் - ஒழுக்கம். உலகப்படைப்புக்குக் காரணமான ஆற்றல் நீல ஒளியில் உள்ளது. அந்த ஒளியிலிருந்து உலகம் படைக்கப்படுகின்றது. ஆகவே அவள் "நீல மேனியாள்" எனப்பட்டாள். அதனுள் அறிவான சிவந்த ஒளி விளங்கும் எல்லா உயிர்களிலும் உள்ளது. இத்தகைய இரண்டு வகைப்பட்ட ஒளிகளால் நுட்ப உலகங்களும், பருவுலகங்களும் படைக்கப்பட்டு ஐந்தொழில் நடைபெறுகின்றது. இத்தகையதான யோக இரகசியத்தை விளக்குதற் பொருட்டாகத் தென்னாட்டுக்கு வந்ததாய்த் திருமூலர் உரைத்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக