ஞாயிறு, 12 மே, 2013

THIRUMANTIRAM - 75 சிதாகாயத்தில் பொருந்தியிருந்தேன்.


75.                        இருந்தவக் காரணங் கேளிந் திரனே       
                             பொருந்திய செல்வப் புவனா பதியாம்    
                             அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன் 
                             பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.

     சித்தாந்த முதன்மை மாணவருள் ஒருவனான இந்திரனே! இவ்வாறு ஏழு  ஆதாரங்களையும் பொருந்தி இருப்பதற்குரிய காரணம் கூறுவேன், கேட்பாயாக! அங்கே பொருந்திய புவனங்களுக்குத் தலைவியான அரிய தவத்திற்குரிய செல்வியைச் சிதாகாயப் பெருவெளியில் பக்தியினால் அவளை அடைந்து தரிசித்தபின் நான் அவளுடன் திரும்பினேன். 

     விளக்கம் :  இந்திரன் - திருமூலரின் மாணவர்களுள் ஒருவன். புவனாபதி - பராசக்தி. அருந்தவச் செல்வி - அரிய தவத்திற்குரிய செல்வி; பராசக்தி. அண்டம் என்ற ஆகாயக் கூற்றில் சிவத்தை நோக்கி மேல் ஏறும் போது கீழே சுருண்டு கிடந்த குண்டலினி நிமிர்ந்து மேல் செல்லும். சமாதிக்குச் சென்று மீள்பவரைப் போன்று பேரறிவுடன் கூடிப் பின் பிரியும். இதனையே 'பரிந்துடன் வந்தனன் பத்தியினாலே' என்றார். எனவே இதில் உணர்த்தப்படுவது பராசக்தியின் அருள் பெற அப்படி ஏழு ஆதாரங்களிலும் பொருந்தியிருந்தான் என்பதாம்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக