ஞாயிறு, 10 ஜூன், 2012

இறைவன் வெம்மையன், குளிர்ந்தவன்!

8.                           தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்;
                              ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை;
                              சேயினும் நல்லன்; அணியன்நல் அன்பர்க்கு;
                              தாயினும் நல்லன்; தாழ்சடை யோனே.


     தாழ்ந்த சடையை உடைய சிவபெருமான் தீயைவிட வெம்மை உடையவன். (அடியார்க்கு) நீரைவிடக் குளிர்ந்தவன்; குழந்தையைவிட நல்லவன்; பக்கத்தே விளங்குபவன்; நல்ல அடியார்க்குத் தாயைவிட அருள் செய்பவன்; இவ்வாறிருந்தும் அப்பெருமானின் அருளை அறிபவர் எவரும் இலர்.


     விளக்கம் :  வெய்யன் - தீயர்க்குக் கொடியவன். தண்ணியன் - அடியார்க்கு அருள் செய்பவன். அவர்தம் அருள் பெரிது ஆதலால் அதை அறிவார் இலர் என்றார். சேய் - குழந்தை. இறைவனின் எளிமையைச் 'சேயினும் நல்லன்' என்றார். தாயினும் நல்லன் - தாயைவிட மிக்க அருள் உடையவன்.

1 கருத்து: