வெள்ளி, 8 ஜூன், 2012

பரீட்சையில் தோல்வியா? கவலைப்படாதீர்!

நாளிதழ் செய்தி :


     மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வைரவநத்தத்தைச் சேர்ந்த கருத்தப் பாண்டி மகள் வளர்மதி (15). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியிருந்தார்.

     நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அவர் பெயிலானார். இதனால் மன வேதனையடைந்த வளர்மதி விஷம் குடித்து மயங்கிய நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

     இதேபோல் சமயநல்லூர் அருகேயுள்ள ஊர்மெச்சிகுளத்தைச் சேர்ந்த பெரியசாமி மகள் சவுந்தர்யா (15) என்பவரும், எம்.சத்திரப்பட்டி அருகேயுள்ள அந்தமான் பட்டியைச் சேர்ந்த கண்ணன் மகள் குணாதேவி என்பவரும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்தனர்.

     அவர்கள் 2 பேரும் விஷம் குடித்து மயங்கிய நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

     இந்த செய்தியால் என்ன தெரிகின்றது. பரீட்சையில் தோல்வியடைந்தால் உடனே தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதற்குக் காரணம் யார்? சமுதாயமா? பெற்றோரா? ஆசிரியர்களா? தோல்வியை தைரியமாக எதிர்கொள்ள முடியாத மாணவர்களா? வருடா வருடம் நாடெங்கிலும் பலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். காலாகாலமாக இதுதான் நடைபெற்றுக்கொண்டு வருகிறது. இதற்கு முடிவுதான் என்ன? 

சத்குரு என்பவரிடம் ஒருவர் கேள்வி கேட்கிறார். அதற்கு அவர் கூறிய பதில். 

     நான் இந்த வருடமும் பட்டமேற்படிப்பை முடிக்கவில்லை.இரண்டு பாடங்களில் மீண்டும் தேர்ச்சி பெறவில்லை. வாழ்க்கையே வெறுத்த நிலையில் இருக்கிறேன். அதிலிருந்து என்னால் வெளியே வர முடியவில்லை. நான் என்ன செய்வது?

     விரக்தி என்பது மிகவும் மோசமான ஆரம்பம். முதலில் விரக்தி வரும். தொடர்ந்து மனத்தளர்வு வரும். அப்புறம் மனஅழுத்தமே வந்துவிடும்.


     உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். ஒருமுறை சாத்தான், தன் வியாபாரத்தை நிறுத்திவிட நினைத்தார். எனவே தான் இதுவரை உபயோகித்து வந்த அத்தனை கருவிகளையும் விற்பனைக்கு வைத்தார். கோபம், காமம், பேராசை, பொறாமை, அகங்காரம் ஆகிய அனைத்தையும் அவர் விற்பனைக்கு வைத்தார். மக்கள் அவை அனைத்தையும் வாங்கிவிட்டனர். அப்படியும் அவருடைய பையில் ஏதோ கொஞ்சம் மிச்சமிருப்பதை ஒருவர் பார்த்துவிட்டார்.


     எனவே 'பையில் இன்னும் என்ன இருக்கிறது?' என்று அவர்கள் கேட்டனர். அதற்கு சாத்தான், 'இவையெல்லாம் மிகத் திறமையான கருவிகள். மீண்டும் ஒருவேளை நான் வியாபாரத்தில் இறங்கினால், இவை எனக்குத் தேவைப்படும். எனவே, இவற்றை நான் இப்போதைக்கு விற்பனைக்கு வைக்கப் போவதில்லை. அனைத்திற்கும் மேலே, இவை மிகவும் விலை உயர்ந்தவை. ஏனென்றால் இவை உயிரை அழிப்பதற்கான மிகச் சிறந்த கருவிகள்' என்றார். 'அவை என்ன?' என்று மக்கள் கேட்க, சாத்தான் சொன்னார், 'மனத்தளர்வு' மற்றும் 'மன அழுத்தம்'.


     உங்களுக்குள் உற்சாகம் இல்லாமல் போனாலோ, மன அழுத்தம் வந்துவிட்டலோ, உயிரோட்டத்தையே இழந்து விடுவீர்கள். 'நான் இப்போது விரக்தியில் இருக்கிறேன்' என்று நீங்கள் சொல்லும்போதே, மனத்தளர்வு மற்றும் மன அழுத்தத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். எனவே, விரக்திதான் முதல் படி.


     சரி, விரக்தியை எப்படி விரட்டியடிப்பது? அதை நீங்கள் விலைக்கு வாங்காமல் இருந்தாலே போதும்! விரக்தி தானாக உங்களுக்குள் வராது. ஏனென்றால் உயிர் என்பதும் உற்சாகம் என்பதும் வெவ்வேறல்ல. ஒரு எறும்பு எப்படிச் செயல்படுகிறது என்று பாருங்கள்! அதை நீங்கள் நிறுத்த முயற்சி செய்தால், எப்போதாவது அது விரக்தியடைகிறதா அல்லது நம்பிக்கை இழக்கிறததா? அது சாகும்வரை தன்னுடைய முயற்சியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


     கூரையில் வளரும் சிறுசெடியைப் பாருங்கள்! கூரையில் கொஞ்சம் மண் மட்டும்தான் அதற்குக்கிடைக்கிறது. அதை வைத்துக்கொண்டு சிலமுறை 25 அடி வரைகூட, தன்னுடைய வேர்களை தரைக்கு நீட்டித்துவிடுகிறது. அந்தச் செடி எப்போதாவது விரக்தி அடைகிறதா? ஏனெனில் உயிருக்கு விரக்தி என்றால் என்னவென்றே தெரியாது. உங்கள் மனதிற்குத்தான் விரக்தி ஏற்படும். வரையறைகளுக்கு உட்பட்ட மனம், எப்போதும் பொய்யான எதிர்பார்ப்புகளுடன் வேலை செய்கிறது. உங்கள் எதிர்பார்ப்புகள் வாழ்க்கை நிஜங்களுடன் ஒத்துப்போகாதபோது, உங்கள் எதிர்பார்ப்புகள் வெறும் ஆடம்பரரீதியாக அமையும்போது, பின்னர் அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகும்போது, உலகத்தின் முடிவுக்கே வந்து விட்டதைப் போன்று உங்கள் மனம் உணர்கிறது.


     மாணவர்கள் தேர்வுகளில் தோல்வியடையும்போது, அவர்களில் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள், இல்லையா? ஏனென்றால் தன் வாழ்க்கையே அந்தத் தேர்ச்சியில்தான் அடங்கியிருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் தேர்வு பெறுவதற்காக வழிபடும் ராமர், கிருஷ்ணர், புத்தர், ஏசு ஆகியோர் எந்தத் தேர்விலும் தேர்ச்சி பெற்றதில்லை, தெரியுமா உங்களுக்கு? ஒரு பரீட்சையில் தேர்ச்சி பெறக்கூட அவர்கள் ஆர்வம காட்டியதில்லை.


     ஆகவே பரீட்சையில் தேர்ச்சி பெறாமல் போவது ஒரு பெரிய விஷயமே இல்லை. சமூக சூழ்நிலைக்காக, தேவைகளுக்காக, நீங்கள் ஒரு தேர்வில் தேர்ச்சிபெற விரும்புகிறீர்கள் என்பது சரிதான். ஆனால் அதற்காக, தேர்ச்சி பெறாமல் போனால் விரக்தியடைவது என்பது முழுக்க முழுக்க மனம் சம்பந்தப்பட்ட விஷயம். உயிர் சம்பந்தப்பட்டதல்ல. நீங்கள் விரக்தியில் இருக்கும்போது, 'இது என்ன வாழ்க்கை? செத்துவிடு' என்று உங்கள் மனம்தான் சொல்லும். உயிர் சொல்லாது. உங்கள் வாயை மூடிக் கொண்டு, மூக்கை இரண்டு நிமிடங்களுக்குப் பிடித்து வைத்திருந்து பாருங்கள்? உங்களுக்குள் இருக்கும் உயிர், ''அய்யோ, என்னை வாழ விடு'' என்றுதான் சொல்லும் .


     எனவே உங்கள் உயிருக்கு எதிராகவே நீங்கள் ஏதாவது செய்கிறீர்கள் என்றால், அதுதான் அறியாமை, அதுதான் முட்டாள்தனம். ஒரு முட்டாள்தான் தன்னுடைய உயிருக்கு எதிராகச் செயல்படுவான். ஆனால் தற்போதைக்கு நீங்கள் உங்கள் உயிருக்கு எதிராகவே செயல்படும் ஒரு மனநிலைக்கு ஆளாகிவிட்டீர்கள். உங்களுக்கு வரும் விரக்தி, மனத்தளர்வு, மன அழுத்தம் இவை எல்லாம் நீங்கள் உங்கள் உயிருக்கு எதிராகவே வேலை செய்து கொண்டிருப்பதைத்தான் காட்டுகின்றன. நீங்கள் முட்டாளாக இருந்தால் மட்டுமே இப்படி செய்வீர்கள். நீங்கள் முட்டாளாக இருப்பதால்தான் உங்களுக்கு விரக்தி வருகிறது. புத்திசாலியாக இருந்தால் உங்களுக்கு எப்படி விரக்தி வரும்? உங்கள் புத்திசாலித்தனத்தை செயல்படாமல் தடுத்துவிட்டீர்கள். அதனால்தான், உங்களுக்குள் விரக்தி நுழைந்து விட்டது. இல்லாவிட்டால் விரக்தி, மன அழுத்தம் போன்ற பேச்சுக்கே இடம் வராது.


     மொத்தத்தில் மாணவர்கள் குழந்தைகளுக்குச் சமமானவர்கள். ஒரு சிறு செடியை நட்டு வைத்து, பிறகு அது வளர்ந்து பெரிய மரமாகும் வரை எவ்வளவு பாதுகாப்பு தருகிறோம். ஆடு, மாடுகள் மேய்ந்து விடாமல் அதற்கு வேலி இட்டு எவ்வளவு பக்குவமாக பாதுகாப்பு தருகிறோம். அது மட்டும் இல்லாமல் அதற்கு தண்ணீர் விட்டு, உரம் போட்டு பாதுகாக்கிறோம். 


     அதேபோல மாணவர்களையும் சிறு குழந்தை முதல் ஒரு குறிப்பிட்ட வயது வரும்வரை சுமாராக 20 வயது வரும்வரை சமுதாயத்தில் இருக்கின்ற ஆடு, மாடுகளிடமிருந்து அதாவது தீய பழக்கம் அவர்களைக் கடித்து விடாமல், பிடித்து விடாமல், நல்ல ஒழுங்கு நெறிகளை அவர்கள் கடை பிடிக்கச் செய்ய வேண்டும். இது பெற்றோர்களின் கடமை.


     அடுத்தது ஆசிரியர்கள் தன்னிடம் படிக்கும் மாணவர்கள் சமுதாயத்தில் நல்ல மனிதனாக, ஒழுக்கமானவனாக வருவதற்கு முழு மனத்துடன் பாடுபடவேண்டும். ஏதோ வந்தோம், சொல்லிக் கொடுத்தோம். சம்பளம் வாங்கினோம் என்று இருக்கக்கூடாது. இது ஆசிரியர்கள் கடமை.


     அடுத்தது அரசாங்கம் இலவச பஸ் பாஸ், நோட்டுப் புத்தகம், பேக், காலணிகள், யூனிபார்ம், மதிய உணவு, கல்வியில் இடஒதுக்கீடு செய்தோம், ஸ்காலர்ஷிப் தந்தோம் என்றில்லாமல் மாணவர்களுக்கு தரமான கல்வியைத் தரவேண்டும். இதில் அரசியல் கலக்கக்கூடாது. இது அரசாங்கத்தின் கடமை.


     இவ்வளவு வசதிகள் செய்து தந்தாலும் அதை பயன்படுத்தி தன்னை கல்வியில், ஒழுக்கத்தில் தரம் உயர்த்திக் கொள்ள வேண்டியது மாணவனின் கடமை. 


     இதை எழுதுவதற்கு காரணம் நான் சிறு வயதில் படிக்க வசதி இல்லாமல் போனதுதான். பெற்றோர், சமுதாயம், அரசாங்கம் மட்டுமல்ல, நானும் சிறு வயதில் என்னுடைய பொறுப்பை உணராமல் போனதுதான் காரணம். அதேபோல் பள்ளியில் கூடா நட்பு கேடாய் முடியும். 


திருச்சிற்றம்பலம். நன்றி.         










  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக