சனி, 9 ஜூன், 2012

ஜோதிடம் அறிமுகம்.

     ஜோதிடம் பற்றி எழுத நினைப்பதற்குக் காரணம் ஒவ்வொரு மனிதனும் ஏதாவ்து ஒரு தருணத்தில் யாராவது ஒருவரிடம் என்னுடைய நேரம் காலம் சரியில்லை, என்ன செய்வது என்று தெரியவில்லை. தெரிந்த நல்ல ஜோதிடர் இருந்தால் கூறுங்களேன். எனக்கு நேரம் எப்படி இருக்குதுன்னு பார்க்கலாம் என்பார்கள். எனக்கும் அதுபோல்தான் சிலநேரங்களில் இருந்தது. நான் பலரிடம் சென்று பார்த்தேன். ஒருவரும் சரியாகக் கூறவில்லை. எல்லோரும் மேம்போக்காக தற்சமயம் சரியில்லை. இன்னும் 3 மாதங்களுக்கு இப்படித்தான் இருக்கும். பிறகு எந்த இடையூறும் வராது என்றார்கள். ஆனால் 6 மாதங்களுக்குப் பிறகும் எந்த ஒரு மாற்றமும் வரவில்லை. பிறகு சிந்தித்துப் பார்த்ததில் அனைத்துக்கும் நானே காரணமாக இருந்துள்ளேன் என்பது தெளிவாக தெரிந்தது. இருந்தாலும் வேறு சில நேரங்களில் என்னதான் சரியான வழியில் கடினமாக முயற்சி செய்தாலும்கூட வேறு ஏதோ ஒரு செயல் அல்லது சக்தி அது இயற்கையோ இறைவனோ ஏதோ ஒன்று நம்மை அதனுடைய வழியில் இழுத்துச் செல்கிறது என்று எனக்குத் தோன்றியது.

     அதைப் பற்றி சிந்திக்கும்போது ஏன் நாம் ஜோதிடத்தைப் பற்றி அறிந்துகொள்ள கூடாதா? நாம் ஜோதிடம் படித்து நம்முடைய வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்வோமேயானால் நாமும் தெரிந்து கொண்டு நமக்குத் தெரிந்தவர்களுக்கும் ஜோதிடம் சொல்வோமே என்று மதுரை காமராஜ் யூனிவர்சிட்டியில் ஜோதிடக் கல்வியில் ஒரு வருட டிப்ளமோ கோர்சில் சேர்ந்து படித்தேன். ஆனால் என்னுடைய தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும். சத்தியமாக எனக்கு மண்டையில் ஏறவில்லை. அரைகுறையாக கற்றுக்கொண்டு எனக்கு நானே ஜோதிடம் பார்த்துக் கொள்கிறேன்.ஏதோ நம்மால் முடிந்தது. நான் கற்றதை என்னுடைய பிளாக்கில் தொடர்ந்து எழுத முயற்சி செய்கின்றேன். இறைவனின் கருணை இருந்தால் ஜோதிடப் பாடங்கள் முழுவதையும் எழுதி முடித்து விடுவேன் என்று நம்புகிறேன். இறைவனின் கருணையால் நீங்களும் தெரிந்து கொள்ளலாம். முழுமையான தெளிவு இல்லாமல் பிறருக்கு பலன்ககளைக் கூறாதீர்கள். முதலில் ஜோதிடத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் பற்றி பார்ப்போம்.

அறிமுகம் - பின்னணி - வரலாறு.

     பாரத தேசத்தின் வடமொழி இலக்கிய வரலாற்றைக் காணும்பொழுது முதல் இடத்தில் இருப்பவை, இருக்கு வேதம், யசுர் வேதம், சாமவேதம் மற்றும் அதர்வண வேதமாகும். இந்த வேதங்களுக்கு உறுப்புகளாக சிக்க்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம் மற்றும் கல்பம் ஆகிய ஆறும் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் சோதிட சாத்திரம், வேதத்தின் கண்களாகப் போற்றப்படுகின்றது.

     உலகில் எப்பொருளைக் காணவேண்டுமாயினும் கண்ணெனும் உறுப்பைக் கொண்டுதான் காண முடிகிறது. வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள யாகம் முதலியவற்றைக் குறித்த காலத்தில் செய்யத் தேவையான காலங்களை நிர்ணயிக்க இந்தச் சாத்திரம் மிகவும் பயன்பட்டதாகத் தெரிகின்றது. நான்கு வகை சோதிடம் இருந்ததாகவும் தெரிய வருகிறது. அவற்றுள் சாமவேதத்தின் சோதிடம் தற்போது கிடைக்கவில்லை. இருக்கு வேதத்தின் சோதிடம் 'ஆர்ச்ச ஜ்யோதிஷம்' எனப்படும். இதில் முப்பத்தாறு சுலோகங்கள் காணப்படுகின்றன. யசுர் வேதத்தின் சோதிடம் " யாஜுஜ்யோதிம் " எனப்படும். இதில் முப்பத்தொன்பது சுலோகங்கள் காணப்படுகின்றன. அதர்வண வேதத்தின் சோதிடம் 'ஆதர்வண ஜ்யோதிம்' எனப்படும். இதில் நூற்றியறுபத்திரண்டு சுலோகங்கள் காணப்படுகின்றன. இதை லக்கர் என்பவர் இயற்றியதாகக் கருதப்படுகிறது. இதற்குப் பின் வந்த சோதிடநூல் "ஜ்யோதிஷ வேதாந்தமாகும்" இதன் ஆசிரியர் யார் என்று தெரியவில்லை. இதில் முப்பத்தாறு சுலோகங்கள் இருக்கு வேதத்தைச் சார்ந்தனவாகவும், நாற்பத்தாறு சுலோகங்கள் யசுர் வேதத்தைச் சார்ந்தனவாகவும் உள்ளன. இந்த வேதாங்கத்தின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமே சோதிட சாத்திரம் எனப்படுகிறது.


     இதன் தொடர்ச்சியை மீண்டும் நாளை அல்லது நாளை மறுநாள் எழுத முயற்சி செய்கின்றேன். 


நன்றி : திருச்சிற்றம்பலம். 

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக